* ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் மோதிய லீக் ஆட்டத்தின்போது, புழுதிப் புயல் வீசியதில் லக்னோ ஏகனா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் சரிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக அந்தப் பகுதி கேலரியில் குறைந்த அளவிலான ரசிகர்களே இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
* இந்திய அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்த நிலையில், ‘பாக். அணி வீரர்களின் உடல்தகுதி கவலை அளிக்கிறது. தற்போது வீரர்களுக்கு எந்த உடல்தகுதி சோதனையும் நடத்தப்படுவது இல்லை.
மிஸ்பா பயிற்சியாளராகவும் தேர்வுக் குழு உறுப்பினராகவும் இருந்தபோது வீரர்களின் உடல்தகுதியை நிர்ணயிக்க ‘யோ-யோ’ சோதனை கட்டாயம் என்பதில் உறுதியாக இருந்தார். தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் மாதத்துக்கு ஒரு முறையாவது உடல்தகுதி சோதனை செய்துகொள்வது அவசியம். அப்படி இல்லை என்றால் இது போன்ற தோல்விகளை தவிர்க்க முடியாது’ என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
* வங்கதேச அணி தொடக்க வீரர் லிட்டன் தாஸ், புனே ஓட்டல் வளாகத்தில் காத்திருந்த செய்தியாளர்களை வெளியேற்றுமாறு பாதுகாவலர்களிடம் கேட்டுக்கொண்டார். இந்த சம்பவம் வங்கதேச மீடியாவில் கடும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், லிட்டன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதுடன் மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளார்.
* இந்தியா விளையாடாத மற்ற லீக் ஆட்டங்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே ரசிகர்கள் வருவது சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில், அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியின்போது தங்கள் அணிக்கு போதிய ரசிகர்கள் ஆதரவு இல்லை என விரக்தியுடன் தெரிவித்த பாக். அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்…
‘இது ஐசிசி நடத்தும் போட்டி போலவே இல்லை. ஏதோ பிசிசிஐ நிகழ்ச்சி போல இருந்தது’ என கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை தொடர் மிகவும் வெற்றிகரமானதாக அமையும் என ஐசிசி சேர்மன் கிரெக் பர்க்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.