Monday, July 14, 2025
Home ஆன்மிகம் மௌனமே வார்த்தையாய்…

மௌனமே வார்த்தையாய்…

by Lavanya

உலகத்தில் தினமும் பற்பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. தனிமனித வாழ்விலிருந்து பொதுவாழ்வு வரை, இந்தப் பிரச்னைகள் பல்வேறு விதங்களில் இருக்கின்றன. விளைவுகளும் வெவ்வேறாக இருக்கின்றன.
ஆனால், மிக நுட்பமாக இந்தப் பிரச்னைக்குள் ஊடுருவிப் பார்த்தால், பெரும்பாலான பிரச்னைகளுக்கு, பேச்சுதான் காரணமாக இருக்கிறது. தவறான பேச்சு அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பேச்சு என ஏதோ ஒருவகையில் பிரச்னைக்குப் பேச்சு காரணமாக இருக்கிறது. மனிதனின் ஐந்து இந்திரியங்களில், காதுக்கு கேட்கும் ஒரு விஷயத்தை மட்டும் வைத்தான். கண்களுக்கு பார்க்கும் விஷயத்தை மட்டும் வைத்தான். மூக்குக்கு மணம் உணரும் ஆற்றலை மட்டும் வைத்தான். ஆனால், இந்த வாய்க்கு மட்டும் இரண்டு வேலையை வைத்தான். இரண்டு கண்கள், இரண்டு காதுகள், ஒரு வேலையைச் செய்யும். ஆனால், ஒரு வாய் இரண்டு வேலையைச் செய்யும்.

உண்பதற்காக வைத்த வாயை பேசுவதற்கும் பயன்படுத்துகிறோம். ஆனால், தவறாக உண்டாலும், தவறாகப் பேசினாலும், அது பெரும் சிக்கலைத் தந்து விடுகின்றது. இரண்டு வயதில் பேசுவதற்குத் திறன் பெற்று விடுகின்றோம். ஆனால், நம்மில் பலருக்கு சாகும்வரை எப்படிப் பேசுவது என்பது புரிவதில்லை.அதுவும் பழைய காலத்தை விட நிகழ்காலத்தில், இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பல நேரங்களில் பேசுவதை விட, பேசாமல் இருப்பதுதான் பாதுகாப்பாக இருக்கிறது. காரணம், ‘‘இப்படியா நினைத்து நாம் பேசினோம்” என்று நினைக்கும் அளவுக்கு, ஒருவருடைய பேச்சு பல நூறு விதமாகப் பொருள் கொள்ளப்படுகிறது.எப்படிப் பேசுவது என்பதைத் தெரிந்து கொள்வதை விட, எப்படி எல்லாம் பேசாமல் இருப்பது என்பதைத் தெரிந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம்.அதனால்தான் ஆன்றோர்கள் ஆன்மிக முன்னேற்றத்திற்கு, “அதிகம் பேசாதே” என்றார்கள்.

“அதிகம் பேசி அல்லல் படாதே” என்றார்கள். ஒற்றைச் சொல் கூட மிகப்பெரிய விபரீதத்தைத் தந்து விடுகிறது. அரசியின் சிலம்பு கோவலனிடம் இருக்கிறது என்று கோள் சொல்லியதை நம்பிய மன்னன், “அவரை அழைத்து வா விசாரித்து முடிவெடுக்கலாம்” என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால், அவனைக் கொண்டு வா என்று சொல்வதற்கு பதிலாக கொன்று வா என்று சொன்னதினாலே எத்தனை விபரீதம் நேர்ந்தது?சொன்ன சொல் ஒரே சொல். அவசரத்தில் விளைந்த சொல். அது அத்தனை அலங்கோலம் செய்து விட்டுத்தான் ஓய்ந்தது.சொற்களின் வீரியம் நமக்குப் புரிவதில்லை. அதனால்தான் அதை உபயோகப்படுத்தத் தெரியாமல் இருக்கிறோம்.சீதை அனுமனிடம் சொல்லுகின்ற பொழுது, “இலங்கையை அழிப்பதற்கு ஒரு சொல் போதும். ஆனால், அது என் தலைவனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு கற்பித்து விடும் என்பதால் நான் மௌனமாக இருக்கிறேன்” என்றாள்.

எல்லை நீத்த உலகங்கள் யாவும்என் சொல்லினால் சுடுவேன் அது தூயவன் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று வீசினேன் என்பது கம்பராமாயணம்.சொற்களின் ஆற்றல் மகத்தானது.பரத்தையர் வீட்டுக்குச் சென்று வந்ததால் தன் மேனியை, தன்னுடைய கணவனார் தீண்டக் கூடாது என்று எண்ணிய திருநீலகண்டரின் மனைவி, தம்மை நெருங்கிய கணவனாரைத் தடுத்து ‘‘எம்மை தீண்டு வீராகில் திருநீலகண்டம்” என்று சொன்னவுடன், மகுடிக்குக் கட்டுப் பட்ட நாகம் போல, பேசிய வார்த்தையின் வீரியத்திற்குக் கட்டுப்பட்டு பின் வாங்கினார் திருநீலகண்டர்.அதுமட்டுமல்ல, சொல்லப்பட்ட வார்த்தையில் உள்ள இலக்கணத்தையும் கவனித்து ‘எம்மை’ என்று பன்மையில் சொன்னதால் இனி எந்தப் பெண்ணையும் தீண்டுவதில்லை என்று உறுதி எடுத்தார்.சொற்களைக் கவனித்துப் பேச வேண்டும். சொற்களை பேசும் பொழுது கண்களைப் பார்த்து பேச வேண்டும்.

காரணம் பேசுகின்ற சொற் களுக்கும் கண்களுக்கும் தொடர்பு இருக்கிறது. அதனால்தான் பெரியவர்கள் கண்ணைப் பார்த்துப் பேசு என்றார்கள்.மனதில் உள்ள எண்ணங்களை வாய் மறைத்து பேசலாம்.. (உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல்).ஆனால், வாய் மறைத்துப் பேசுவதைக் கண்கள் காட்டிவிடும். ஏனென்றால் கண்களுக்கு மறைக்கத் தெரியாது. அது உள்ளது உள்ளபடி காட்டிக் கொடுத்து விடும்.ராமாயணத்தில் அனுமனுக்கு ராமன் “சொல்லின் செல்வன்” என்ற பட்டத்தைத் தருகின்றான் . பொதுவாகவே மிக இனிமையாகவும் அதிகமாகவும் பேசும் மேடைப் பேச்சாளர்களுக்குச் “சொல்லின் செல்வர்” என்று நாம் பட்டம் தருகின்றோம்.ஆனால், அனுமனுக்கு ராமன் சொல்லின் செல்வன் என்று பாராட் டியது அவன் அதிகமாகப் பேசியதற்காக அல்ல;அதிகமாகப் பேசாமல், எதைப் பேச வேண்டுமோ, அதை மட்டும் பேசியதற்காக. அந்த பேச்சில் சத்தியமும் நேர்மையும் இருந்ததற்காக.ஒரு பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அனுமன் பேச்சுதான் உதாரணம்.

1. சரியான வார்த்தைகளைப் பயன்
படுத்திப் பேசினார்.
2. குழப்பம் இல்லாமல் தெளிவாகப் பேசினார்.
3. என்ன சொல்ல வேண்டுமோ அதை மட்டும் சொன்னார்.
4. இனிமையான வார்த்தைகளைக் கொண்டு பேசினார் .

பேசினால் இப்படிப் பேச வேண்டும். அப்படிப் பேசத் தெரியாவிட்டால் பேசாமல் இருப்பது மிகவும் பாதுகாப்பானது.கவிஞர் கண்ணதாசன் அற்புதமான ஒரு வரியை ஒரு பாடலில் சொல்வார். ‘‘சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை”அருணகிரிநாதர் முருகனிடம் வேண்டு கின்ற பொழுது, ‘‘சும்மா இரு சொல்லற” என்ற நிலையை வேண்டுகின்றார். இந்த நிலையை அனுபூதிநிலை என்பார்கள். நல்ல பேச்சை வெள்ளிக்கும், (Silver) மௌனத்தை தங்கத்திற்கும் (Gold) ஈடாகக் கருதுவார்கள். காரணம் பேச்சைவிட மௌனம் வலிமையானது கம்பீரமானது. பேச்சுக்கு பல மொழி தேவைப்படும். ஆனால் மௌனத்திற்கு ஒரு மொழி போதும்.நீங்கள் எவ்வளவு பேசினாலும் எதிரி மௌனத்தை பதிலாகத் தருகிறான் என்றால், உங்கள் உரத்த குரலும் கனத்த பேச்சும் தோற்று விட்டது என்று பொருள்.பேசுவதற்கு உடல் வலிமை தேவைப்படலாம்.

ஆனால், மௌனத்திற்கு மனவலிமை தேவை.வாய்க்கு இரண்டு வேலை இருக்கிறது என்று சொன்னேன். ஒன்று சாப்பிடுவது ஒன்று பேசுவது. இது இரண்டையும் முறைப்படுத்தினால் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.அதனால் தான் நோன்பு என்று ஒன்று வைத்தார்கள். மாதத்திற்கு ஓரிரு நாள் சாப்பிடாமல் இருக்க உண்ணா நோன்பு என்று வைத்தார்கள். அதைப் போலவே மாதத்திற்கு ஒன்றிரண்டு நாள் பேசா நோன்பும் இருக்க வேண்டும். அதற்கு மௌன விரதம் என்று பெயர். தியானம், ஜபம் போன்றவை எல்லாம் இந்தப் பேசா நோன்பின் கூறுகள். தியானத்தின்போது யாரும் பேசுவதில்லை. ஜபம் செய்யும் போது மந்திரத்தைக் கூட மனதிற்குள் தான் சொல்ல வேண்டும். இதை ஆன்மிகம் வலியுறுத்துகிறது. உண்ணா நோன்பு இருக்கும் நாம், பேசா நோன்பு இருப்பதில்லை.ஓரிரு நாட்கள் பேசா நோன்பு அதாவது மௌன விரதம் இருந்து பாருங்கள். அதன் மகத்துவம் தெரியும்.

தேஜஸ்வி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi