சென்னை : சென்னையில் போக்குவரத்து சிக்னல்கள் அருகே ஹாரன் மூலம் ஒலி மாசு ஏற்படுவதை தடுக்க, போலீசார் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். நாட்டின் பிற மெட்ரோ நகரங்களில் பின்பற்றப்படும் நடைமுறையை சென்னை போக்குவரத்து காவல்துறையும் பின்பற்ற உள்ளது. அதன்படி, ஒலியை அளவிடும் டெசிமல் மீட்டர்களை போக்குவரத்து சிக்னல்களுடன் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து ஹாரன் அடித்து கொண்டே இருக்கும் பட்சத்தில், ஒலி மாசு அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டினால், சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டே இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
முதற்கட்டமாக சென்னையில் இதனை நடைமுறைப்படுத்த தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரையின் பேரில் 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது. இந்த நடைமுறை படிப்படியாக மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களில் ஒலி அளவு அதிகமாக இருப்பதை கண்டுபிடிப்பதற்கு போக்குவரத்து காவலர்களுக்கு இயர் பிளக் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.