திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ரயில்வே நிலையம் அருகில் சிக்னல் கோளாறு, தண்டவாள விரிசலால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரக்கோணம் பகுதியில் இருந்து சென்னை மார்க்கமாக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் ரயில் மூலம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை மார்க்கத்தில் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள், சென்னைக்கு வேலைக்காக செல்லும் பணியாளர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் ரயில் மூலம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ரயில்வே நிலையம் அருகில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு மற்றும் தண்டவாள விரிசல் காரணமாக அரக்கோணத்தில் இருந்து சென்னை மார்க்கமாக இயக்கப்படும் ரயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சென்னை மார்க்கமாக செல்லும் ரயில் பயணிகள் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
ரயில் வரும் நேரம் தெரியாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணி நிமித்தமாக சென்னை மார்க்கமாக செல்லும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர். சிக்னல் கண்ட்ரோலர் கோளாறு, விரிசல் ஏற்பட்டுள்ள இடத்தில் 50-க்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு சீரமைத்தனர். இதன் காரணமாக 1 மணி நேர தாமதத்துக்குப் பிறகு சென்னை மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து சீரானது.