பெங்களூரு: கர்நாடக பழங்குடியினர் நலத்துறைக்கு உட்பட்டது, வால்மீகி மேம்பாட்டு ஆணையம். இந்த ஆணையத்தில் ரூ.94 கோடி முறைகேடு நடந்துள்ளது. இதில் வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரிந்ததால், சி.பி.ஐ., விசாரித்தது. மேலும் பணம் சட்டவிரோதமாக சில வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டு இருப்பதாக, அமலாக்கத்துறைக்கு, சி.பி.ஐ., தகவல் கொடுத்தது. இதையடுத்து, பழங்குடியினர் நல அமைச்சராக இருந்த நாகேந்திரா, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவரான காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசனகவுடா தத்தல் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் நாகேந்திராவை கடந்த 12ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.
இது தொடர்பாக சமூக நலத்துறை கூடுதல் இயக்குனர் கல்லேஷிடம் கடந்த 16 மற்றும் 18ம் தேதி அமலாக்க துறை விசாரணை நடத்தியது. இந்த நிலையில் தன்னை விசாரித்த அமலாக்க துறையின் அதிகாரிகளான மிட்டல் மற்றும், முரளி கண்ணன் இருவரும் இந்த வழக்கில் முதல்வருக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தியதாக கல்லேஷ் பெங்களூரு சேஷாத்திரிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சமூக நலத்துறை கூடுதல் இயக்குனர் கல்லேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகளான மிட்டல் மற்றும் முரளி கண்ணன் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.