புதுடெல்லி: கர்நாடகா முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பூசிகளுக்கும் மாரடைப்பு மரணங்கள் அதிகரிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என ஒன்றிய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கடந்த ஒரே மாதத்தில் 40 வயதுக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் அடுத்தடுத்து இறந்தனர். கொரோனா தடுப்பூசிகளை அவசரமாக அங்கீகரித்து, பொதுமக்களுக்கு உடனடியாக விநியோகிக்கப்பட்டது மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என குற்றம்சாட்டிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, இந்த விஷயத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும், நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் நேற்று முன்தினம் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், சித்தராமையாவின் குற்றச்சாட்டுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று விளக்கம் அளித்துள்ளது. அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவலுக்கு பிறகு 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் மத்தியில் திடீரென மாரடைப்பு மரணங்கள் அதிகரிப்பதை கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ஐசிஎம்ஆர்), தேசிய நோய் தடுப்பு மையமும் (என்சிடிசி) இணைந்து செயல்படுகின்றன. இதுதொடர்பாக 2021 மற்றும் 2023ல் 2 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்களுக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை என்பது உறுதியாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. மிகவும் அரிதான நிகழ்வுகளில் மட்டுமே பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க மரபியல், ஆபத்தான வாழ்க்கை முறை தேர்வுகள், கொரோனாவுக்கு பிந்தைய சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் காரணமாக இருக்கலாம். எனவே, திடீர் மரணங்களுடன் கொரோனா தடுப்பூசியை இணைப்பது தவறான தகவல். அறிவியல் பூர்வமாக அதற்கு ஆதாரங்கள் இல்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.