நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே முக்கலம்பாடு பகுதியை சேர்ந்தவர் அஜின் ஜோஸ் (27). பிரபல ரவுடி. கொலை வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாததால் அவருக்கு ஜாமீனில் வரமுடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. போலீசார் அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் குருந்தன்கோடு அம்மன் கோயில் அருகில் அஜின் ஜோஸ் நிற்பதாக தகவல் கிடைத்து, இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அஜின் ஜோஸ் வீச்சரிவாளை எடுத்து ‘உங்களை கொன்றால்தான் என்னால் வாழ முடியும்’ என்று கூறி சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணனின் இடது பக்க கழுத்தில் வெட்ட முயன்றார். அவர் விலகிக்கொள்ளவே இடது பக்க வயிற்றில் உரசி சென்றது. இதில் அவரது சீருடை கிழிந்தது. பின்னர் வீச்சரிவாளுடன் அஜின் ஜோசை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். 2019ல் இருந்து ரவுடி பட்டியலில் உள்ள அஜின்ஜோஸ் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.