திருமலை: மும்பையில் நைஜீரியரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ80 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்க முயன்ற எஸ்ஐயை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், சைபராபாத் காவல் ஆணையரகத்தின் கீழ் சைபர் க்ரைம் பிரிவில் எஸ்.ஐயாக பணிபுரிந்து வருபவர் ராஜேந்தர். சைபர் க்ரைம் குற்ற வழக்கு விசாரணை தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் மும்பை சென்றார். அங்கு சைபர் மோசடி செய்த நைஜீரியர் ஒருவரை கைது செய்தபோது அவரிடம் இருந்த 1,750 கிராம் போதை பொருட்களை எஸ்.ஐ. ராஜேந்தர் பறிமுதல் செய்தார்.
இதை கணக்கு காட்டாமல் தனது வீட்டிற்கு எடுத்து சென்று பதுக்கி வைத்துள்ளார். பின்னர் அவற்றை விற்க முயன்றார். இதையறிந்த மாநில போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், ராயதுர்கம் காவல் நிலைய போலீசாருடன் இணைந்து அவரது வீட்டில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். சுமார் 1,750 கிராம் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மதிப்பு ரூ80 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து எஸ்ஐ ராஜேந்தரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
ஏற்கனவே ராயதுர்கம் எஸ்ஐயாக பணியாற்றியபோது ராஜேந்தரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அப்போது ராஜேந்தரை பணியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த உத்தரவுக்கு நீதிமன்றத்தில் இருந்து ராஜேந்தர் தற்காலிக தடை பெற்று மீண்டும் பணியில் சேர்ந்தார். அதன்பிறகு சைபராபாத் சி.சி.எஸ். பிரிவில் எஸ்.ஐயாக பணி புரிந்தார். தற்போது சைபர் க்ரைம் பிரிவில் பணி புரிந்து போதை பொருட்களை விற்பனை செய்தபோது மீண்டும் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.