மும்பை: இந்திய கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக, நேற்று மும்பை விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்று 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஐபிஎல் போட்டிகள் முடிவுற்ற நிலையில், இந்தியா ஏ அணி, இங்கிலாந்து சென்று, இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் அதிகாரப்பூர்வமமற்ற 2வது டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது. இந்நிலையில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி நேற்று மும்பை விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டு சென்றது.
இந்திய அணியில் இருந்து நட்சத்திர வீரர்கள் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா ஓய்வு பெற்ற பின் இங்கிலாந்து அணியுடன் நடக்கும் போட்டித் தொடர் என்பதால், இத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இப்போட்டிகள், லீட்ஸ் நகரின் ஹெடிங்லி, பர்மிங்காம் நகரில் எட்ஜ்பாஸ்டன், லண்டனில் லார்ட்ஸ், ஓவல், மான்செஸ்டர் நகரில் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானங்களில் நடைபெற உள்ளன. இந்தியாவில் கடந்தாண்டு நடந்த டெஸ்ட் போட்டிகளில் 4-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை அடுத்து, இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற்றுள்ளதால் அவர் ஆட மாட்டார். தவிர, ஜானி பேர்ஸ்டோ, பென் ஃபோக்ஸ், ஒல்லி ராபின்சன் ஆகியோர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய டெஸ்ட் அணியில், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் ( துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரெல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20 – 24 தேதியும், 2வது டெஸ்ட் ஜூலை 2 – 6, 3வது டெஸ்ட் ஜூலை 10 – 14, 4வது டெஸ்ட் ஜூலை 23 – 27, 5வது டெஸ்ட் ஜூலை 31 – ஆக. 4 தேதிகளில் நடக்கின்றன.