பர்மிங்காம்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே, பர்மிங்காம் நகரில் இன்று 2வது டெஸ்ட் போட்டி துவங்குகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய ஆடவர் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லீட்சில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. முதல் டெஸ்டில் இந்தியாவின் 5 வீரர்கள் சதமடித்தும், வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்க முடியாமல் சாதனை தோல்வியை தழுவ நேரிட்டது. அதற்கு, 2வது இன்னிங்சில் இங்கிலாந்தை இந்திய பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்த முடியாததே காரணம்.
இந்நிலையில் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகத்துடன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இன்று 2வது டெஸ்டில் களம் காண இருக்கிறது. அதேவேளை, இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தின் டெஸ்ட் அணியில் இணைந்துள்ளார். அவர் இன்று 2வது டெஸ்டில் ஆடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். இந்தியா கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட்களில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. அதனால் இந்தியாவுக்கு மட்டுமல்ல; புதுக் கேப்டன் கில்லுக்கும் வெற்றி அவசியம்.
இன்று போட்டி நடக்கும் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் அரங்கில், இதற்கு முன் இந்தியா – இங்கிலாந்து அணிகள், 1967ம் ஆண்டு முதல் முறையாக மோதின. அதன் பிறகு 1974, 1979, 1986, 1996, 2011, 2018, 2022ம் ஆண்டுகளில் விளையாடி உள்ளன. கடந்த 58 ஆண்டுகளில் இவ்விரு அணிகளும் 8 முறை மோதியுள்ளன. அவற்றில் ஒரே ஒரு முறை (1986) மட்டும் இரு அணிகளும் டிரா செய்துள்ளன. எஞ்சிய 7 ஆட்டங்களிலும் இங்கிலாந்துதான் வெற்றி வாகை சூடியுள்ளது. இப்போது 9வது முறையாக இரு அணிகளும் மோத உள்ளன. இப்போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்து 58 ஆண்டு வரலாற்றை சுப்மன் கில் மாற்றி எழுதுவார் என்ற நம்பிக்கையுடன் இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.