சென்னை: போதைப் பொருள் பயன்பாடு வழக்கில் தீவிர விசாரணைக்குப் பிறகு நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் வழக்கில் நேற்று நேரில் ஆஜரான நடிகர் கிருஷ்ணாவிடம் 14 மணி நேரத்திற்கும் மேலாக விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர். மருத்துவப் பரிசோதனையில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என தெரிய வந்துள்ளது. இருப்பினும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நபர்கள் உடனான இவரது தொலைபேசி உரையாடல்கள் மற்றும் தொடர்புகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணாவின் சமூக வலைதளக் கணக்குகளை ஆய்வு செய்து போதைப்பொருள் குறித்து கருத்துகளை பரிமாறியுள்ளாரா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடிகர் கிருஷ்ணா வீட்டில் 2 மணி நேரமாக போலீசார் சோதனை நடத்தினர். இரைப்பை அலர்ஜியால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக வாக்குமூலம் அளித்த நிலையில், அவர் பயன்படுத்தும் மருந்துகளை ஆய்வுக்காக போலீசார் எடுத்து கொண்டனர். இந்த நிலையில், கிருஷ்ணாவின் நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு சிலரிடம் code word மூலம் தகவல் பரிமாற்றம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2020 முதல் கிருஷ்ணாவின் செல்போனில் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வரும் நிலையில், Code word-க்கு என்ன அர்த்தம்? அது போதைப்பொருள் தொடர்புடையதா? என கிருஷ்ணாவிடம் விசாரணை நடந்தது. கிருஷ்ணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் போதைப் பொருள் சப்ளை செய்த கெவின் என்பவரும் கைது செய்யப்பட்டார். கெவின் – கைதான அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் இடையே நடந்த பணப்பரிவர்த்தனையும் விசாரணையில் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் வழக்கில் ஏற்கனவே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.