அகமதாபாத்: ஐபிஎல்லில் 3 வெவ்வேறு அணிகளுக்கு கேப்டனாக பொறுப்பேற்று அந்த அணிகளை இறுதிச் சுற்றுக்கு அழைத்து சென்று மாபெரும் சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்தி உள்ளார். ஐபிஎல் 18வது தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணியை, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. ஷ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே, 2020ல் டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்டு அந்த அணியை இறுதிச் சுற்று வரை கொண்டு சென்றவர்.
மேலும், கடந்த 2024ல், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிச் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. தற்போது பஞ்சாப் அணிக்கு தலைமையேற்றுள்ள ஷ்ரேயாஸ், 3வது முறையாக, தான் தலைமை தாங்கும் அணியை இறுதிச் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை வேறு எந்தவொரு கேப்டனும் 3 வெவ்வேறு அணிகளுக்கு தலைமையேற்று இறுதிச் சுற்றுக்கு அழைத்துச் சென்றதில்லை. அத்தகைய மாபெரும் சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் அரங்கேற்றி உள்ளார்.