இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் மோதலின்போது மேற்கொண்ட அமைதிக்கான முயற்சிகள் காரணமாக, அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வழங்க பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் கையெழுத்திட்ட இதற்கான பரிந்துரைக் கடிதம் ஏற்கெனவே நார்வேயில் உள்ள நோபல் அமைதி பரிசுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரானின் போர்டோ, இஸ்பஹான் மற்றும் நடான்ஸ் ஆகிய 3 அணுசக்தி தளங்களை தாக்குதல் நடத்தி அமெரிக்கா முற்றிலுமாக அழித்துள்ளதையடுத்து டிரம்புக்கான நோபல் பரிந்துரை மீது பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாகிஸ்தானின் ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் அமைப்பின் தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான மவுலானா பஸ்லூர் ரெஹ்மான், பாகிஸ்தான் அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதேபோல், அலி முகமது கான் எம்பி உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.