நன்றி குங்குமம் டாக்டர்
மனிதனின் மூட்டுகளில் மிகவும் வலிமையானது தோள்பட்டை மூட்டு ஆகும். மனிதனால் அதிக எடை தாங்கும் பகுதியும் தோள்பட்டை தான் என்றால் மாற்றுக் கருத்து கிடையாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்தக் தோள்பட்டை மூட்டின் திசுக்கள் தடித்து தழும்பாக மாறி இறுகிவிடுவதால் மூட்டின் இயக்கம் குறையும் நிலையே தோள்பட்டை வலி(frozen Shoulder) என்று பொதுவாகக் கூறப்படுகிறது. குறிப்பாக 40 முதல் 60 வயதுடையோர் அதிகமாக இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.
நமது தோள்பட்டை பந்து கிண்ண மூட்டு என்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதாவது தோள்பட்டை வளையமும் முன் கை எலும்பு (Humerus) இணைந்து பந்து கிண்ண மூட்டு அமைப்பை உருவாக்குகிறது. இந்த மூட்டுப் பகுதியைச் சுற்றியுள்ள மிக மிருதுவான ஜவ்வு போன்ற பகுதி. பணியின்போது ஏற்படும் காயங்களால் தனது இலகுவான நிலையிலிருந்து இறுகிப்போவதால் மூட்டின் இயங்கு தன்மை பாதிக்கப்படும்.
யாரெல்லாம் பாதிக்கப்படுவர்:இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் நடுத்தர வயதுடையோர் குறிப்பாகப் பெண்களுக்கு வரும். கைகளை உயரே தூக்கி இயங்கும் கூடைப் பந்து வீரர்கள், டென்னிஸ் விளையாடுபவர்கள், பந்தை வேகமாக வீசி எறிகிறவர்கள் ஆகியோருக்கு வரக்கூடும். சர்க்கரை நோயாளிகளுக்கு மற்றவர்களோடு ஒப்பிடும்போது மூன்று மடங்கு வாய்ப்புகள் அதிகம்.
அடிபட்ட பிறகு நீண்ட நாட்களுக்கு மூட்டை இயங்காமல் கட்டு போடுதல், குறிப்பாக பரம்பரைக் கட்டு வைத்தியம் செய்தல், பக்கவாதம் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின்பு முறையாகப் பயிற்சி இல்லாமல் நீண்ட நாட்கள் ஓய்வெடுத்தல், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
காரணங்கள்:சர்க்கரை வியாதி அல்லது நோய் எதிர்ப்புத்தன்மை குறைவாக இருந்தால் தோள் மூட்டில் சுலபமாக மூட்டு அழற்சி மற்றும் வீக்கம் ஏற்படும். மேலும் அடிபட்ட பின்போ அல்லது அறுவை சிகிச்சைக்குப் பின்போ நீண்ட நாட்கள் மூட்டு இயக்கம் இல்லாமல் இருந்தாலும் மூட்டு வீக்கம் ஏற்பட்டு தழும்பாக மாறி ஒட்டிக் கொள்வதோடு மூட்டுகள் இறுக்கப்பட்டு வலி உண்டாகும். இந்தநிலை ஏற்பட ஏறக்குறைய 2 முதல் 9 மாதங்கள் ஆகிறது.
இளைஞர்களுக்கு அடிபடுதல், கீழே விழுதல் போன்றவற்றாலும் சிலருக்குத் தோள்பட்டையில் கால்சியம் அதிகமாகச் சேர்ந்துவிடுவதாலும் இந்த வலி வருகிறது.
அறிகுறிகள்:ஆரம்ப நிலையில் லேசான தோள்பட்டை வலியாக ஏற்பட்டு மூட்டின் இயக்கத்தைக் குறைக்கும். மேலும் வலியினால் முன்புபோல் தோள்பட்டையை அசைக்க முடியாமல் போகும். உதாரணத்திற்கு அலமாரியில் உள்ள பொருளை கையை உயர்த்தி எடுக்க முடியாமல் போகும்.சிலருக்கு வீக்கமும் மற்றும் தோள்பட்டை இறுக்கமும் ஏற்படலாம். நாளடைவில் பிரச்னை அதிகரித்து நமது அன்றாட வேலைகளையே, உதாரணமாக ஆடை ஆணிதல், பல் துலக்குதல் போன்ற வேலைகளைச் செய்ய முடியாமல் போகலாம்.
பரிசோதனையும் சிகிச்சையும், மருத்துவர் சொல்லும் அறிகுறிகளை வைத்தும் தோள்பட்டை மூட்டின் இயக்கத்தைப் பரிசோதித்தும் வலிக்கான காரணத்தை அறியலாம்.இருந்தபோதிலும் ரத்த பரிசோதனை குறிப்பாக சர்க்கரை நோய், தைராய்டு குறைபாடு மற்றும் யூரிக் அமிலவாதம் போன்றவற்றை அறிய தேவைப்படும். சில நேரங்களில் இதன்மூலம் நோய்த்தொற்று இருப்பதையும் அறியலாம்.
எக்ஸ்ரே படம் எடுப்பதன் மூலம் மூட்டு எலும்பு தேய்மானம் மற்றும் வேறு குறைபாடுகளை அறியலாம். சில நேரங்களில் சாயத்தை ஊசி மூலம் செலுத்தி எக்ஸ்ரே எடுப்பதன் மூலம் மூட்டின் உள்பகுதிகளைத் தெளிவாக காணலாம்.எம்.ஆர்.ஐ எடுப்பதின் மூலம் தோள்பட்டை மூட்டு சவ்வு கிழிதல் மற்றும் பல நோய்களின் காரணிகளையும் அறிந்து கொள்ளலாம்,
சிகிச்சைமுறை:
வலியைப் பொறுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். சில நேரங்களில் தோள்பட்டை மூட்டில் போடப்படும் ஸ்டீராய்டு ஊசி மூலமும் பயன் கிடைக்கும்.
உடற்பயிற்சி:
பெரும்பாலான தோள்பட்டை வலி, குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே சரியாகிவிடும் என்றாலும் இயன்முறை வைத்தியம் (பிஸியோதெரபி) மிக முக்கிய தீர்வாக இருக்கிறது. ஐஸ்கட்டி அல்லது சுடு தண்ணீர் ஒத்தடம் குறைந்தது 15 நிமிடங்கள் ஒருநாளைக்கு பலமுறை கொடுப்பதன் மூலம் மூட்டின் வீக்கம் மற்றும் வலியை குறைக்கலாம். தோள்பட்டை மூட்டை நீட்டி பயிற்சி செய்வதன் மூலம் இழந்த மூட்டின் இயக்கத்தைப் பெறலாம். வீட்டில் செய்யக்கூடிய பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தால், பெரும்பாலும் தோள்பட்டை வலியிலிருந்து அறுவை சிகிச்சை இல்லாமல் விடுதலை பெறலாம்.
அறுவை சிகிச்சை:
எலும்புகள் பாதிப்பு ஏற்படும் நிலை அதாவது மூட்டு எலும்புகள் உராய்தல், எலும்பு உடைந்து விடுதல், மூட்டுகள் இறுக்கமடைந்து விடுதல் போன்றவற்றை அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்யலாம்.சிலருக்குத் தோள்பட்டை எலும்பு மூட்டுகளுக்கிடையே உள்ள தசைகள் பலவீனமடைந்து இருக்கும். சிலருக்கு இவை வலுவிழந்துபோயிருக்கும்.
இதனால் மூட்டு எலும்புகளுக்கிடையே உரிய இடைவெளி குறைந்து எலும்புகள் உரசி தாங்கமுடியாத வலி ஏற்படும். இவர்களுக்கு முன்பிருந்த அறுவைசிகிச்சை முறையைவிட நவீன சாவி துவார சிகிச்சை (கீ ஹோல் சர்ஜரி) செய்யப்படுகிறது. இதன் மூலம் ரத்த சேதாரமில்லாமல், தையல் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. நோயாளி அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்கவேண்டியதில்லை.