– ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.
ஆம். கட்டாயம் அணிய வேண்டும். பெண்கள் மட்டுமல்ல, திருமணம் ஆன ஆண்களுக்கும் கால்விரல்களிலே அணிந்துகொள்ளும் மிஞ்சி என்ற ஆபரணம் என்பது உண்டு. ஒரு ஆண்மகன் தலைநிமிர்ந்து நடப்பான், பெண்கள் தலைநிமிராமல் நடப்பார்கள் என்பதால் அக்காலத்தில் இந்த நடைமுறையை வைத்திருந்தார்கள். அதாவது எதிரே ஒரு பெண் வரும்போது அவள் நெற்றி வகிட்டில் இருக்கும் குங்குமமும் அவளது கழுத்தில் தொங்கும் மஞ்சள் கயிறையும் கண்டு இவள் மணமானவள் இந்தப் பெண்ணை நாம் சகோதரியாக பாவிக்க வேண்டும் என்று ஆண்மகனும், எதிரே வரும் ஆண்மகனின் கால்களில் மிஞ்சியைப் பார்த்ததும் இவன் திருமணமானவன், இவனை நாம் உடன்பிறந்தோனாக எண்ண வேண்டும் என்று அந்தப் பெண்ணும் கருதவேண்டும் என்பதற்காக இந்த நடைமுறையை வைத்திருந்தார்கள். காலப்போக்கில் ஆண்கள் கால்மிஞ்சி அணிவது என்பது திருமண நாள் அன்று மட்டும் என்பதாகச் சுருங்கிவிட்டது. அதுவும் சில பிரிவினர் மட்டுமே இன்றளவும் விடாமல் இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறார்கள். திருமணமான பெண்கள் மிஞ்சி அணிவது என்பது அவர்களின் உடல்நலம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக, அதாவது கால் மோதிரவிரலில் மெட்டியின் மூலமாகத் தரப்படும் அழுத்தமானது அவர்களின் கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகளை நீக்குகிறது. பிரசவத்தின்போதும், பிரசவித்த பின்னர் அவர்களின் உடல்நலத்தைக் காப்பதிலும் மெட்டியானது முக்கியப் பங்காற்றுகிறது என்பதால் நம்முடைய முன்னோர்கள் இந்த சம்பிரதாயத்தை வைத்திருக்கிறார்கள். மணமான பெண்கள் கட்டாயம் மெட்டி அணிய வேண்டும்.
?கையெழுத்திற்கும் தலையெழுத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
– சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
இல்லை. கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்காது என்பது போல் ஒரு சிலர் தவறான கருத்தினை பரப்பி வைத்திருக்கிறார்கள். கையெழுத்து மற்றும் தலையெழுத்து ஆகிய இரண்டும் நன்றாக இருப்பவர்களும் நம் கண் முன்னே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஜோதிடவியல் ரீதியாக தலையெழுத்து என்பது லக்ன பாவகத்தைக் குறிக்கிறது. லக்ன பாவகம் நன்றாக அமைந்திருந்தால், எழுதப் படிக்க தெரியாதவனாக இருந்தாலும் அனுபவ அறிவின் மூலம் வாழ்வில் உயர்ந்த நிலையை எட்டிவிடுவான். ஆக கையெழுத்திற்கும் தலையெழுத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
?கடகராசி, ஆயில்யம் நட்சத்திரக் காரர்கள் வாழ்வில் முன்னேற வாய்ப்புள்ளதா?
– காகை ஜெ.ரவிக்குமார், காங்கயம்.
எந்த ராசி, எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் உண்மையான உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தாலே வாழ்வில் நிச்சயமாக முன்னேறமுடியும்.
?நின்றுகொண்டு, முட்டிபோட்டுக் கொண்டு, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து இவற்றில் இறைவனை எப்படி வணங்க வேண்டும்?
– வண்ணை கணேசன், சென்னை.
இது அவரவர் சம்பிரதாயத்திற்கு உட்பட்டது. இறைவனை மானசீகமாக வணங்குவதற்கு தனியாக விதிமுறைகள் ஏதும் கிடையாது. நினைத்த இடத்தில் நினைத்த மாத்திரத்தில் கண்ணை மூடித் தியானித்தும் இறைவனை வணங்கலாம். அதே நேரத்தில் ஆலயத்திற்குச் சென்று இறைவனை வணங்கும்போது நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல வணங்கு
வதற்கு விதிமுறைகள் என்பது உண்டு. மூலஸ்தானம் மற்றும் ஆலய சந்நதிகளில் வணங்கும்போது நின்றுகொண்டும், வெளியே கொடிமரம் தாண்டி வணங்கும்போது நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குவதும் நம்முடைய சம்பிரதாயத்தில் விதிமுறையாக சொல்லப்பட்டிருக்கிறது. உடல்நிலை சரியில்லாதவர்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் வயது முதிர்ந்த நிலையில் உள்ள முதியவர்களுக்கும் இவ்வாறு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குவதில் விதிவிலக்கு
என்பது உண்டு.
?மனிதனால் பிற கோள்களில் வாழ முடியுமா?
– சுபா, ராமேஸ்வரம்.
முடியாது. பூலோகம் என்று அழைக்கப்படும் இந்த பூமியில் வாழ்பவர்களுக்கு மட்டுமே மனிதன் என்று பெயர். இந்த மண்ணிலே பிறந்தவர்களை மண்ணவர் என்றும், விண்ணிலே வாழ்பவர்களை விண்ணவர் என்றும் குறிப்பிடுவது உண்டு. மண்ணவர் என்றாலும் மனிதன் என்றாலும் ஒன்றுதான். மனிதர்களை ஆள்பவனை மன்னவன் என்றும் அழைத்தார்கள். ஆக, மனிதனால் பூமியில் மட்டுமே வாழ முடியும். சந்திர மண்டலத்தில் மனிதன் கால் பதித்திருக்கிறான் என்றாலும், அவனால் இயற்கையான முறையில் அங்கே வாழ இயலாது. இது மற்ற கோள்களுக்கும் பொருந்தும்.
?செய்யும் தொழிலே தெய்வம்தானே?
– டி.நரசிம்மராஜ், மதுரை.
அதிலென்ன சந்தேகம். நிச்சயமாக செய்யும் தொழில் தெய்வம்தான். ஒரு முடிவெட்டும் தொழிலாளிக்கு அவரது கத்திரிக்கோலும், சீப்பும்தான் தெய்வம். தனது இஷ்ட தெய்வத்தை எண்ணி கத்திரிக் கோலையும், சீப்பையும் கண்களில் ஒற்றிக்கொண்டு தனது பணியினைச் செய்யத் தொடங்குகிறார். ஒரு மெக்கானிக்கிற்கு ஸ்பேனரும், ஸ்குரூ டிரைவரும்தான் தெய்வம். காலையில் தனது ஒர்க்ஷாப்பைத் திறந்ததும் அவற்றைக் கண்களில் ஒற்றிக்கொண்டு தனது பணியைத் தொடங்குகிறார். ஐ.டி. கம்பெனியில் பணியாற்றுபவர்களுக்கு அவரவருடைய கேபின்தான் கோயில். கம்ப்யூட்டர்தான் தெய்வம். கம்ப்யூட்டர் ஆனாலும், கலப்பை ஆனாலும் நாம் எதனைத் தொட்டு பணி செய்கிறோமோ அதுவே நமது தெய்வம்.
அலுவலகம் வந்து அமர்ந்தவுடன் ஐந்து நொடிகள் மட்டும் கண்ணை மூடித் தியானித்து இறைவனை வணங்கி பணியினைத் தொடங்குங்கள். இரவில் உறங்குவதற்கு முன்பாக இன்றைய பொழுதினை நற்பொழுதாக்கிய இறைவனுக்கு நன்றி கூறி கண்களை மூடி உறங்குங்கள். காலையில் எழுந்ததும் ஒருமுறை, இரவில் படுக்கச் செல்வதற்கு முன்பாக ஒரு முறை என ஒரு நாளைக்கு இரண்டு முறை கண்களை மூடி இறைவனைத் துதித்தாலே போதும், இறைவனின் அருள் உங்களிடம் நிறைந்திருக்கும்.
?வீட்டில் எலுமிச்சை தீபம் ஏற்றலாமா?
– பொன்விழி, அன்னூர்.
வீட்டில் மட்டுமல்ல எந்த இடத்தில் தீபம் ஏற்றினாலும் எலுமிச்சை தீபம் என்பதற்கு சாஸ்திரத்தில் ஆதாரம் இல்லை. மண் அகல் மற்றும் வெண்கலம், வெள்ளி போன்ற உலோகங்களில் செய்யப்பட்ட விளக்குகளில் தீபம் ஏற்றலாம். எலுமிச்சை தீபம் என்பதை சாஸ்திரம் பரிந்துரைக்கவில்லை என்பதால், அது ஏற்புடையது அல்ல என்பதே அடியேனின் தாழ்மையான கருத்து.
திருக்கோவிலூர் K.B ஹரிபிரசாத் சர்மா