கூடுவாஞ்சேரி: வண்டலூர் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் நரேஷ்குமார் (25). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளன. இதில், நரேஷ்குமார் வெல்டிங் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், அவர் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். இதில், வண்டலூர் ஊராட்சிக்குட்பட்ட மு.க.ஸ்டாலின் சாலையில் நரேஷ்குமார் நடந்து சென்றுள்ளார். அப்போது, அந்த சாலையில் உள்ள திருவீதி அம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு கடையின் படிக்கட்டில் அதே பகுதியை சேர்ந்த முகிலன், சொக்கலிங்கம் உட்பட 3 பேர் உட்கார்ந்திருந்தனர்.
அப்போது, சாலையில் நடந்து சென்ற நரேஷ்குமார் அந்த 3 பேரையும் பார்த்து முறைத்தப்படி சென்றுள்ளார் என கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த 3 பேரும் சாலையில் நீ போகும்போதும் வரும்போதும் ஏன் எங்களை பார்த்து முறைத்தபடி செல்கிறாய் என கூறி சரமாரியாக அடித்து உதைத்து உள்ளனர். பின்னர், கையில் மறைத்து வைத்திருந்த வீச்சு அரிவாளால் நரேஷ்குமாரின் இடது காலில் சரமாரியாக வெட்டினர். இதில், அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் திரண்டு ஓடி வருவதை கண்டதும் அங்கிருந்து 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.
இதில், வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த நரேஷ்குமாரை அப்பகுதி மக்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நரேஷ்குமாரை வெட்டி விட்டு தப்பி ஓட்டம் பிடித்த 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். பட்ட பகலில் நடந்த இச்சம்பவத்தால் வண்டலூரில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.