மும்பை: ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்தி, வட்டி விகிதம் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கிறது. இந்த மாதத்துக்கான கூட்டம், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சக்தி காந்ததாஸ் நேற்று அறிவித்தார். அவர் கூறியதாவது:
குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவீதமாக நீடிக்கிறது. தொடர்ந்து 9வது முறையாக இந்த நிலைப்பாட்டை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. இதனால், வீடு, வாகன இஎம்ஐயில் மாற்றம் இருக்காது. நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாகவும், முதல் காலாண்டில் 7.1 சதவீதமாகவும் இருக்கும். உணவுப்பொருட்கள் விலை உயர்வு பண வீக்கத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மோசடி கடன் ஆப்ஸ்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு இணைய தளம் உருவாக்கப்படும். இவ்வாறு சக்தி காந்ததாஸ் கூறினார்.