Friday, April 19, 2024
Home » சிறுகதை-முள்

சிறுகதை-முள்

by Nithya
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழி

கல்யாணமான புதிதில் எவ்வளவுப் பெருமையாக இருந்தது கிருத்திகாவுக்கு… போட்டிப் போட்டுக்கொண்டு வந்து நின்ற நூற்றுக்கணக்கான பெண்களை ஒதுக்கிவிட்டு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த தன்னை தொழிலதிபர் விகாஷ் தேர்ந்தெடுத்ததையும், ஹனிமூனுக்கு சுவிட்சர்லாந்து போய் வந்ததையும் கல்லூரிக் காலத் தோழிகளிடம் பீற்றிக் கொண்டது இப்போதும் நினைவில் நிற்கிறது.

‘‘உங்க பொசிஷனுக்கும், ஸ்டேட்டஸுக்கும் ஏத்தப் பெண்கள் எத்தனையோ பேர் வந்தும் என்னை எதுக்கு செலெக்ட் பண்ணீங்க?” என்று ஆரம்பத்தில் பல முறை கேட்டிருக்கிறாள். சிறு புன்னகை மட்டுமே அதற்குப் பதிலாக வந்தது விகாஷிடமிருந்து. ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அவளுடைய அந்தக் கேள்விக்கான பதில் வேறு விதத்தில் கிடைக்குமென்று அவள் எதிர்பார்க்கவில்லை.

அன்று -பார்ட்டி ஒன்றில் கலந்துவிட்டு வீடு திரும்பினான் விகாஷ். மிதமான மது வாடை அவனிடமிருந்து. சாப்பிடாமல் அவன்  வருகைக்காகக் காத்திருந்த கிருத்திகா கேட்டாள்:

‘‘என்னங்க, ஒரு மாதிரியான வாடை அடிக்குது..?”
‘‘இதுகூட தெரியலையா..? சரியாப்போச்சு. இது விஸ்கி வாசனை.”
ஏதோ ஒரு கூல் டிரிங்ஸ் சாப்பிட்டுவிட்டு வந்தவன்போல் படுசாதாரணமாகச் சொன்னான்.

திடுக்கிட்டவள், ‘‘நீங்க டிரிங்ஸ்கூட
எடுத்துப்பீங்களா..?” என்றாள்.
‘‘ஆமாண்டி… இதையெல்லாம் நீ

கண்டுக்கக்கூடாது. கண்டுக்காம இருக்கணுங்கறதுக்காகத்தான் உன்னைக் கட்டிக்கிட்டேன். எனக்கு ஈக்வல் லெவல்ல இருக்கறப் பொண்ணைக் கட்டிக்கிட்டிருந்தா ஒண்ணு, அவளும் என்கூட சேர்ந்து விஸ்கி அடிச்சி ருப்பா. இல்லேன்னா, நான் குடிக்கறதை கண்டுக்காம விட்டிருப்பா. பேசாம ஒரு ஓரமா கிடப்பியா. அதை வுட்டுட்டு…” பேசிக்கொண்டே தள்ளாடி, தள்ளாடிப் படி ஏறிப்போன கணவனை பிரமையுடன் வெறித்தாள் கிருத்திகா.‘இவ்வளவுதானா? இதுதானா வாழ்க்கை? எத்தனை கனவுகள்? என்னென்ன ஆசைகள்? எல்லாமே குழிதோண்டி புதைக்கப்படப்போகின்றனவா? இதையா நான் எதிர்பார்த்தேன்? இதற்காகவா இத்தனை நாளும் தவமிருந்தேன்?’ கனமான சோகம் ஒன்று அவளை அழுத்திக்கொண்டது. சிலந்தி வலையாய் பயம் அவளை சுற்றிப் படர்ந்தது.

‘‘இதோ பாரு, ஃப்ரெண்டு ஒருத்தன் பார்ட்டி அரேஞ்ச் பண்ணியிருக்கான். எல்லோரும் ஜோடி, ஜோடியா வரப்போறாங்க. அதனால, கொஞ்சம் நீட்டா டிரெஸ் பண்ணிக்கிட்டு ரெடியா இரு. சாயந்தரம் வந்து உன்னை கூட்டிக்கிட்டுப்போறேன்” என்று சொல்லிவிட்டுப்போனான் விகாஷ்.‘பார்ட்டியில் எப்பேர்ப்பட்ட ஆளுங்கெல்லாம் வரப்போறாங்களோ’ என பயந்தாள் கிருத்திகா. அவள் பயந்ததுபோலவே நடந்தது சாயந்தரம் அவள் பார்ட்டியில் கலந்து கொண்டபோது.

‘‘விகாஷ்… உன் ஒய்ஃப் டிரிங்க்ஸ் அடிக்கமாட்டாங்களா?” என்று ஒருவன் கிளற, ‘‘இல்லேப்பா, தயவு செஞ்சு அவளைத் தொந்தரவு பண்ணாதீங்க” என்றான் விகாஷ். அந்த ஹால் முழுக்க வயிற்றை குமட்டும் மது வாடையும், மூச்சைத் திணறடிக்கும் சிகரெட் புகைமண்டலமுமாகச் சூழ்ந்து கிருத்திகாவைக் கலங்கடித்துக் கொண்டிருந்தது. ‘ஏன் வந்தோம்’ என்றாகிவிட்டது.திடீரென்று சிடி ப்ளேயரில் மியூஸிக் அதிர, ஜோடி, ஜோடியாய் எழுந்து ஆட ஆரம்பித்துவிட்டார்கள்.

‘‘ஹேய்… வா மேன்… என்ன உட்கார்ந்துட்டே..?” என்று சொல்லிக்கொண்டே விகாஷ் கையைப் பிடித்து இழுத்தான் ஒருவன்.‘‘இரு, இரு… என்னால ஆடமுடியாது. வேணும்னா என் ஒய்ஃபைக் கூட்டிட்டுப் போ…” – போதையில் உளறினான். அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றாள் கிருத்திகா. உடல் முழுக்க கம்பளி பூச்சி ஊர்வது போல் இருந்தது. ‘சே… மனுஷனா இவன்? சொந்தப் பெண்டாட்டியை கண்டவனோடு ஆடச் சொல்றானே…’ விகாஷின் நண்பன் தன்னை நோக்கி வருவதைக் கண்டு ‘குபீ’ரென எழுந்து நின்றாள். ‘‘ஏய்… ஏய்…” – விகாஷ் அழைப்பதையும் பொருட்படுத்தாமல் ‘விர்’ரென அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.

‘‘ஏண்டி, உனக்கு எவ்வளவுத் தைரியமிருந்தா பார்ட்டியை விட்டு ஓடிப் போவே? அவ்வளவு கொழுப்பாடி உனக்கு? அத்தனை பேர் எதிர்ல அவமானம் தாங்காம தலை குனிஞ்சு நிக்க வேண்டியதா போச்சேடி… கழுதை…” – உறுமினான்.‘‘கண்டவனோடு என்னை ஆடச்சொல்றீங்களே, உங்களுக்கு வெக்கமா இல்லை?” – தைரியத்தை வரவழைத்து முதல் முறையாக வெறுப்பை உமிழ்ந்தாள் கிருத்திகா. உடனே அதற்கான சன்மானம் கிடைத்தது.கன்னத்தில் ‘பளார்…’ என்ற ஆக்ரோஷ அறை.

‘‘இதோ பார்… இது டாப் கிளாஸ் ஜனங்களோட சொைஸட்டி. இந்த மாதிரி விஷயங்களெல்லாம் எங்களுக்கு சர்வசாதாரணம். எல்லாத்தையும் சிம்பிளா எடுத்துக்கிட்டு ஃப்ரீயா மூவ் பண்ணணும். பண்ணத் தெரியலேன்னா கத்துக்கணும். புரியுதா? எனக்கு என் சொஸைட்டில நல்ல பேர். அந்த பேர் கெட்டுப்போகாம இருக்கணும். அதுக்கு நான் என்ன வேணாலும் பண்ணத் தயார்…”‘‘இது என்ன சொஸைட்டி? சொந்தப் பெண்டாட்டி வேறொருவனுடன் சேர்ந்து ஆட்டம், பாட்டம் போடறதும், குடி, கூத்து, கும்மாளம் அடிக்கிறதும்தானா நாகரீகம்? இதுவா இவங்களோட கலாச்சாரம்? இதுல இவங்க பேரு வேற கெட்டுப் போயிடுதாமே, பேரு…’’அழுது, அழுது முகம் வீங்கிப்போனதுதான் மிச்சம். அவளால் அவனை எதிர்த்து நிற்கவோ, அவனைவிட்டுப் பிரியவோ இயலவில்லை. அது அவ்வளவு சுலபமான காரியமாகவும் தெரியவில்லை. விளைவு?
‘நகர’ வாழ்க்கை என்று நம்பி வந்தவளுக்கு, ‘நரக’ வாழ்க்கைதான் கிடைத்தது.

அன்று…‘‘சனியனே… ‘சரியான பட்டிக்காட்டைக் கட்டிக்கிட்டியே’ன்னு கேட்டுட்டான் என் ஃப்ரெண்டு. இப்படியா பிஹேவ் பண்றது? என் பேரையே கெடுத்திட்டியேடி பாவி…” – விளாசினான் வார்த்தைகளாலும், பெல்ட்டாலும்.

பெண்மையின் மென்மையான உணர்வுகளை மதிக்கத் தெரியாத இவனெல்லாம் ஒரு மனிதன். இவனுக்கு ஒரு பேரு… சை…!
காலிங் பெல் அவள் சிந்தனையை கலைத்தது. எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.தோழி மணிமாலா- சின்னத்திரை நடிகை.

“அடடா… வாப்பா… எத்தனை நாளாச்சு உன்னைப் பார்த்து?” என்று அவளை வரவேற்றாள்.“பொய். தினமும் என்னைப் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கே?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்து உரிமையுடன் சோபாவில் அமர்ந்தாள். “டி.வி.ல பார்க்கறதுக்கும், நேர்ல பார்க்கறதுக்கும் வித்தியாசம் இல்லையா?” என்று சொன்னவள், “ஆமாம், இவ்வளவு பிஸியான நடிகைக்கு எப்படி நேரம் கிடைத்தது என்னைப் பார்க்க?” என்று கேட்டாள்.

“இதே தெருவுல ஒரு பங்களாவுல இன்னைக்கு ஷூட்டிங். அது திடீர்னு கேன்சல் ஆயிருச்சு. இவ்வளவு தூரம் வந்து உன்னைப் பார்க்காமல் போகமுடியுமா?”
“ஒரு நிமிஷம்..” என்றவள், திரும்பி குரல் கொடுக்க பணிப்பெண் வந்து நின்றாள்.

“என்ன சாப்பிடறே? ஹாட், ஆர் கூல்..?”
“உன்னோட விருப்பம்.”
“ரெண்டு ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வா” என்று சொல்லிவிட்டு தோழி பக்கம் திரும்பினாள் கிருத்திகா.“என்னப்பா, எப்படி போகுது உன்னோட லைஃப்? ஜாலியா இருக்கா? சந்தோஷமாத்தானே இருக்கே?” என்று மணிமாலா கேட்டதும், அடக்கமுடியாமல் ‘குபுக்’கென்று கிளம்பிவிட்டது கண்ணீர்.

நடந்த எல்லா விஷயங்களையும் விவரமாய்ச் சொன்ன கிருத்திகா, ‘‘பேருதாண்டி அவருக்கு முக்கியம். அதுக்காக அவர் எது வேணாலும் பண்ணுவார். அவருக்கு உறைக்கிற மாதிரி உபதேசம் பண்றதால அவர் ஒருபோதும் திருந்தப் போவதில்லை. அவரை விட்டு விலகிப் போயிடறதுதான் உத்தமம்…”
“எங்கே போவே?”

“என்கிட்ட படிப்பு இருக்கு. அறிவு இருக்கு. இதை வெச்சு கண்காணாத இடத்துக்குப் போய் ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கப்போறேன். தயவு செஞ்சு என்னைத் தடுக்காதே ப்ளீஸ்…” என்றாள் உறுதியாக. கண்ணீருடன் அவள் சோகக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த மணிமாலா, ‘‘அடிப் பைத்தியம். இங்கேதான் நீ தப்பு பண்றே” என்றாள்.“நீ என்ன சொல்றே..?” – புரியாமல் தோழியை பார்த்தாள் கிருத்திகா.

“எல்லோருக்கும் எல்லாமே கிடைக்கறதில்லை. சிலருக்கு ரோஜாப்பூ கிடைத்தால், சிலருக்கு முள் கிடைக்கும். ஆனால், அதுக்காக இடிஞ்சுப் போயிடக் கூடாது. உன்னோட தலையெழுத்து, நீ முள்கிட்ட சிக்கிக்கிட்டே. முள் மேல சேலைப் பட்டாலும், சேலை மேல முள் பட்டாலும் சேதாரம் சேலைக்குத்தான்.”
“அப்ப என்ன பண்ணனுங்கறே?”

“இந்த இடத்துலதான் நீ ஜாக்கிரதையா நடந்துக்கணும்.”
“எப்படி?”
“முள் குத்தாம சேலையை மிக நாசுக்கா, லாவகமா எடுக்கணும்…”
“புரியலை.” “முள்ளை முள்ளாலதான் எடுக்கணும்.” என்ற மணிமாலா, “இதோ பார், கிருத்தி… இது என்னோட செல் நெம்பர். வாட்ஸ்அப்ல அடிக்கடி தொடர்பில் இரு” என்று சொல்லி விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு எழுந்துகொண்டாள். அவளை வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தாள் கிருத்திகா.

அன்று அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய விகாஷ், கிருத்திகாவை காணாது வீடு முழுக்கத் தேடினான். பணியாட்களை அழைத்துக் கேட்டான்.“ஒரு வேலையா வெளியே போறதா சொல்லிட்டுப் போனாங்க சார்” என்று அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கேட் திறக்கும் சத்தம். எழுந்து சென்று பார்த்தான். கிருத்திகாதான்.

தள்ளாடியபடி நடந்து வந்துகொண்டிருந்தாள். ஓடிப்போய் அவளை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்தான் விகாஷ். மிதமான மது வாடை அவளிடமிருந்து.

உள்ளூர சந்தோஷப்பட்டான். உளறிக்கொண்டிருந்தவளை மெதுவாகப் படுக்க வைத்தான்.எப்படியோ குடிக்கப் பழகிக்கொண்டிருக்கிறாள் கிருத்திகா. இனி கவலை யில்லை. மற்ற பழக்க வழக்கங்களும் கொஞ்சங் கொஞ்சமாய் கற்றுக்கொள்வாள். தன் சொஸைட்டிக்கு மேட்ச் ஆகிவிடுவாள் என்ற நம்பிக்கை பிறந்தது.
ஒரு வாரம் ஓடியது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. பால்கனியில் அமர்ந்து அன்றைய நாளிதழில் சென்செக்ஸ் எத்தனை புள்ளிகள் வீழ்ந்தது என்று பார்த்துக்கொண்டிருந்தான் விகாஷ். கிருத்திகா தோழியை பார்க்கப் போயிருந்தாள்.சிறிது நேரத்தில் வாசலில் ஓர் ஆட்டோ வந்து நின்றது. பேப்பரை மடித்து வைத்துவிட்டு நிமிர்ந்தான் விகாஷ். முதலில் யாரோ ஒருவன் இறங்கினான். அவனை தொடர்ந்து கிருத்திகா. அவள் பின்னாலேயே இன்னொருவன். அளவுக்கு அதிகமாய் அவள் குடித்திருப்பது தெரிந்தது. அவளால் நிற்கக்கூட முடியவில்லை.

அந்த இரண்டு தடியர்களும் ஆளுக்கொரு பக்கம் தாங்கிக்கொள்ள அவர்கள் தோள்களில் கைகளைப்போட்டுக்கொண்டு அவள் நெருக்கமாய் ஒட்டியிருக்க, கைத்தாங்கலாக அவளை அழைத்துக்கொண்டு வந்து விட்டுவிட்டுப் போனார்கள். தெரு முழுக்க ஆங்காங்கே கும்பலாய் நின்று பலர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

முதல் முறையாக தேகமெங்கும் எரிச்சல் பரவியது விகாஷுக்கு.ஏன்?
எதனால்?
அவன் ஸ்டேட்டஸுக்குத் தகுந்த மாதிரிதானே தன்னை மாற்றிக்கொண்டி ருக்கிறாள் தன் மனைவி? வரவேற்க
வேண்டிய விஷயம்தானே இது?

பிறகு ஏன் இந்த எரிச்சல்? இரவு முழுக்க தூக்கம் வரவில்லை அவனுக்கு. மறுநாள் அவன் அலுவலகம் போகவில்லை. அசதியுடன் உறங்கினாள் கிருத்திகா. தாமதமாகத்தான் எழுந்தாள். காபியுடன் வந்தவளை தன் அருகில் அமரச் செய்தான் விகாஷ்.“இதோ பார், கிருத்தி… ஆயிரம்தான் இருந்தாலும் நீ என் ஒய்ஃப். இப்படி கண்டவனெல்லாம் வந்து உன்னை விட்டுவிட்டு போகும் அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட வில்லை. ஏதோ ஒரு வெறியில், கண்மூடித்தனமா நான் நடந்துகிட்டதுக்கு வெரி, வெரி ஸாரி. சத்தியமா சொல்றேன்.

இனி நானும் குடிக்கமாட்டேன். நீயும் தயவு செய்து குடிப்பதை நிறுத்திடு. கண்ணுக்கு நிறைவா எனக்கு மட்டும் நீ மனைவியா இருந்தா போதும். என் பேச்சை தயவு செய்து கேள். ப்ளீஸ்…”“சரிங்க. உங்க விருப்பம் போலவே நடந்துக்கறேன்” என்றாள் கிருத்திகா, தன் தோழி மணிமாலாவின் உதவியோடு நடித்து, முள்ளை சேலையிலிருந்து லாவகமாக எடுத்துவிட்ட திருப்தியில்.

தொகுப்பு: மலர்மதி

You may also like

Leave a Comment

four × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi