Tuesday, November 28, 2023
Home » சிறுகதை-முகமூடி மனிதர்கள்…

சிறுகதை-முகமூடி மனிதர்கள்…

by Nithya

நன்றி குங்குமம் தோழி

இரவு உணவிற்கான மொறுமொறுப்பான தோசையை ரசித்து உண்டவாறே அன்னையிடம் மறுநாள் நடக்க வேண்டிய நிகழ்வுகளை விவரித்துக் கொண்டிருந்தான் அஜய்.
“ம்மா! நாளைக்கு உங்களுக்கு ஃபுல் ரெஸ்ட். மார்னிங் காபி போடுறது என் வேலை. நீங்களும் அப்பாவும் குளிச்சி புது ட்ரெஸ் போட்டுட்டு ரெடியாயிடுங்க. எட்டு மணிக்கு உங்க ஆசைக்காக வடபழனி முருகன் கோயிலுக்குப் போறோம். அர்ச்சனை பண்ணி சாமி கும்பிடுறோம்.

ஒன்பது மணிக்கு சரவணபவனில் டிபன்! உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை நீங்களே ஆர்டர் பண்ணப் போறீங்க! அப்புறம் அக்கா வீட்டுக்குப் போறோம். மதிய லன்ச்சை முடிச்சிட்டு நேராய் தியேட்டர் போறோம். பொன்னியின் செல்வன் பார்க்கணும்னு சொன்னீங்கள்ல? டிக்கெட் புக் பண்ணிட்டேன்” – என்ற மகனை வியப்பாய் பார்த்தாள் ராதா.

“என்ன? தியேட்டர் போகணுமா? அய்யோ… உங்க அப்பாவுக்கு அதெல்லாம் பிடிக்காது அஜய்!”
“அப்படியெல்லாம் எல்லாத்தையும் விட்டுக் கொடுக்கக் கூடாதும்மா! இந்த மாதிரி புராண
படங்களையெல்லாம் தியேட்டர்ல போய் பார்த்தால்தான் சூப்பரா இருக்கும்.
“இல்லடா! அப்பாவுக்கு கூட்டம் இரைச்சல்னா சுத்தமா பிடிக்காது.”

“ம்மா! அப்பாகிட்ட பேசுறது எம்பொறுப்பு. நீங்க முழுசா கேளுங்க! படம் முடிஞ்சதும் காபி சாப்பிட்டுட்டு நேரா பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு போறோம்!”
“எ..ன்ன?” – விழிகளை விரித்தாள் ராதா.“ஆமாம்மா! அங்கே பார்ட்டி ஹால்ல என்ஃபிரெண்ட்ஸ் எல்லாம் டெக்கரேட் பண்ணி பெரிய கேக் வாங்கி வெச்சிருப்பாங்க. நீங்க அதை கட் பண்ணப்போறீங்க. இந்த சில்வர் ஜுப்ளி வெட்டிங் அனிவர்சரியை மிகச் சிறப்பா கொண்டாடப் போறோம்.” – உற்சாகமாய் சொன்ன மகனின் வார்த்தையில் ராதாவின் முகம் பூரித்துப் போனது. திருமணமாகி வந்து இருபத்தி ஐந்து ஆண்டுகளாகியும் கணவனிடம் இணைந்து ஹோட்டல், தியேட்டர் என்று எங்கும் சென்றதில்லை. தன் கணவனுக்கு அதற்கெல்லாம் நேரம் கிட்டியதில்லை.

“அஜய்! பெரிய ஹோட்டல்னா… அங்கே எப்படி சாப்பிடணும்னு எனக்குத் தெரியாதே!”“ஏம்மா! நமக்குத்தான் கை இருக்கே! கையால அள்ளி வாயால சாப்பிட வேண்டியதுதான்.”
“இல்ல… அங்கெல்லாம் மேல்தட்டு ஆட்கள்தான் வருவாங்களாம். ஏதோ குச்சிய வெச்சித்தான் சாப்பிடணுமாம். இல்லன்னா நம்மளை கேவலமா பார்ப்பாங்களாமே…”
“யாரு? அப்பா சொன்னாரா? அதெல்லாம் சும்மாம்மா… நான் கூட்டிட்டு போறேன். வந்து பாருங்க!” – சிரிப்போடு சொல்லிக் கொண்டே எழுந்து கைகழுவிய நேரம் கணவனின் கார் ஹாரன்
அடிக்க, வேகமாய் சென்று வாயிற்கதவை அகலமாய்த் திறந்து வைத்தாள்.

கார் உள்ளே நுழைந்ததும் கதவைப் பூட்டிவிட்டு உள்ளே வர, ஜவுளி பார்சலோடு காரைவிட்டு இறங்கினார் ரகுபதி. ஆர்வமாய் நெருங்கிய மனைவியிடம் கொடுத்து விட்டு உள்ளே நுழைந்தவரை புன்னகை முகமாய் பின் தொடர்ந்தாள் ராதா.திருமணமாகி இத்தனை ஆண்டுகளில் எதுவும் கேளாமலே இன்றுதான் திருமணநாளைக் கொண்டாட புடவை எடுத்துத் தந்திருக்கிறார்.

உடனே கவரைப் பிரித்துப் பார்க்க எழுந்த ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பார்சலை சோபாவில் வைத்துவிட்டு கிச்சனுக்குள் நுழைந்து அடுப்பை பற்ற வைத்தாள்.
ரகுபதிக்கு சாப்பாட்டு மேசையில் அமறும் முன் சாப்பாடு தயாராய் இருக்க வேண்டும். அவர் உடைமாற்றி முகம் கழுவிவிட்டு வருகையில் தோசை-தேங்காய் சட்னி, கார சட்னி என அனைத்தும் தயாராய் எடுத்து வைத்திருந்தாள் ராதா.தந்தை சாப்பிட அமர்ந்ததும் தானும் எதிரே வந்து அமர்ந்து கொண்டான் அஜய்.

“அப்பா! அம்மாவுக்கு ஏதாவது கிஃப்ட்
வாங்கிட்டு வந்தீங்களா?”
“ம்! பட்டு சாரி வாங்கிட்டு வந்திருக்கேன்.”
“பார்ரா! ம்மா! பட்டு சாரியாம். ம்ம்…
அசத்துங்க!”
“ச்சு! சும்மா இருடா!”

“அட! வெட்கத்தைப் பாரு! அப்பா! நாளைக்கு வேற எந்த புரோகிராமும் இல்லையே! நாங்க ஒரு லிஸ்ட் போட்டு வெச்சிருக்கோம். அதுபடிதான் நடக்கணும். இப்பவே சொல்லிட்டேன்.”
“லிஸ்டா? என்ன லிஸ்ட்?” – புருவத்தை உயர்த்தியவாறே கேட்ட ரகுபதியிடம் அஜய் தாயிடம் சற்றுமுன் கூறியதை விவரிக்க, அலட்சியமாய் உதட்டை சுளித்தார்.
“பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு? இவளைக் கூட்டிட்டு?” “ஏம்ப்பா? அம்மா இதுவரை அங்கெல்லாம் போனதே இல்ல. அதான் நானும் அக்காவும் இதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கோம்.”
“அதெல்லாம் எதுவும் வேண்டாம்!”

“ஏன்? ஏன் வேண்டாம்?” – குரலை உயர்த்திய மகனின் தோளைப் பற்றி அமர்த்தினாள் ராதா. தாயின் ஏமாற்றம் படிந்த முகத்தைக் கண்டதும் நாசிவிடைக்க, தந்தையிடம் திரும்பினான் அஜய்.
“ஏன் வேண்டாம்? செலவைப் பத்தி, கவலைப்படாதீங்க. உங்ககிட்ட பத்துபைசா கூட கேட்கமாட்டோம்.”“ஏன்டா செலவைப் பத்தி கவலைப்படுறவன் ஏழாயிரம் ரூபாய்க்கு ஸாப்ட் சில்க் வாங்கிட்டு வருவேனா? பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு போயி உன் அம்மா என்ன செய்வா? பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி பேபேன்னு முழிச்சிட்டு இருப்பா. எல்லாரும் சிரிப்பாங்க. உன் ஃபிரெண்ட்ஸ் முன்னால அவமானப்படப் போறியா?”

“இதுல அவமானப்பட என்ன இருக்கு? புது இடத்துக்கு போனால் அந்த இடத்தை பிரமிப்பாய் பார்ப்பதில் என்ன தவறு? அதென்ன பட்டிக்காட்டான் மிட்டாய் கடைன்னு கேவலமாய் சொல்றீங்க? ஏன் பட்டிக்காட்டான் மிட்டாய் சாப்பிட்டிருக்க மாட்டானா? சொல்லப்போனால் அவன்தான் ஆரோக்கியமான மிட்டாயை சாப்பிட்டிருப்பான்.”“ஏய்! – நான் என்ன சொல்றேன்.. நீ என்ன பேசுற?”“இல்லப்பா! நாளைக்கு கண்டிப்பாய் போறோம். நான் என் ஃபிரெண்ட்ஸை எல்லாம் இன்வைட் பண்ணிட்டேன்.”

“யாரைக் கேட்டு இன்வைட் பண்ணின? நாளைக்கு என் ஆபீஸ்ல வொர்க் பண்றவங்க எல்லாம் நம்ம வீட்டுக்கு வர்றாங்க.”“அப்பா நான்..”“ஷ்! நான் சொல்றதை நீ கேளு! ராதா நாளைக்கு லன்சுக்கு என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் ஃபேமிலியோட வர்றாங்க. ஒரு இருபது பேருக்கு சமைச்சிடு. நீதான் நான்வெஜ் நல்லா பண்ணுவியே! மட்டன் பிரியாணி, சிக்கன் ஃபிரை… அப்புறம் பைப்பர் சிக்கன் பண்ணுவியே… அதையும் பண்ணிடு! வஞ்சிரம் மீனை வறுத்திடு… முட்டைய வெறுமனே வேகவெச்சு வைக்காதே! மசாலா எல்லாம் போட்டு தொக்கு மாதிரி வெப்பியே! அப்படி வை.

கொஞ்சம் மீனை தேங்காய் பாலெடுத்து குழம்பு வெச்சிடு. ஒயிட் ரைஸ்… ரசம் எல்லாம் ரெடி பண்ணிடு. ஸ்வீட்டுக்கு ஏதாவது ரெண்டு வகை செய்திடு! வர்றவங்க எல்லாருமே அசைவப் பிரியர்கள் ராதா! என் மனைவி சூப்பரா சமைப்பான்னு சொல்லி வெச்சிருக்கேன். எதையும் சொதப்பிடாதே! அப்புறம் எனக்குத்தான் அசிங்கம்…” – என்றவாறே கைகழுவியவரை வெறித்தான் அஜய்.

“அப்பா! அம்மா என்ன மனுஷியா மிஷினா? உங்க இஷ்டத்துக்கு லிஸ்ட் போட்டுட்டே போறீங்க?”
“ஏன்டா? இதெல்லாம் எப்பவும் அவ செய்யுறதுதானே?”“நாளைக்கு உங்களுக்கு கல்யாணநாள். அந்த ஒரு நாள் மட்டுமாவது அம்மாவை ப்ரீயா இருக்க விடமாட்டீங்களா?”
“டேய்! கல்யாண நாளைக்கு ட்ரீட் கேட்டதாலதான் என் நண்பர்களை வீட்டுக்கு இன்வைட் பண்ணியிருக்கேன்.”

“ஏன்? ஏதாவது ஹோட்டல்ல ட்ரீட்
கொடுக்கலாமே?”“ஏன்டா ஹோட்டல் ஹோட்டல்னு சொல்லிட்டு இருக்க? வீட்ல சாப்பிடுறதுதான் ஆரோக்கியம்! போய் படு. காலையில எழுந்து அம்மாவுக்கு தேவையான சாமான் எல்லாம் வாங்கிக் கொடுத்திடு. கறி வாங்கும் போது நல்லதா பார்த்து வாங்கு.”“ஹும்!” – கோபமாய் எழுந்து சென்ற மகனைப் பற்றி கவலைப்படாமல் மனைவியை ஏறிட்டார் ரகுபதி.
“ராதா! எம் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் பணிரெண்டு மணிக்கெல்லாம் வந்திடுவாங்க. அதுக்குள்ள லன்ச்சை ரெடிபண்ணிடு. அவங்க வர்றதுக்குள்ள சமையலை முடிச்சிட்டு குளிச்சி நீட்டாய் பட்டுப்புடவையை கட்டிகிட்டு நில்லு. எண்ணெய் வடிஞ்சிட்டு வந்து நிக்காதே! எல்லாருமே வொய்ப்பை கூட்டிக்கிட்டு வர்றானுங்க. லேடீஸைப் பத்தி தெரியாதா? வெட்டிங்டேக்கு என்ன வாங்கித் தந்தேன்னு கேட்பாங்க…”

“ஏழாயிரம் ரூபா பட்டுப்புடவையை
காட்டணும்.”“குட்! நல்லா நீட்டாய் கட்டு! இழுத்து செருகிட்டு கசங்கிப் போய் நிற்காதே!”“சரி” – வெறுமனே தலையாட்டிய ராதாவிற்கு ஏனோ அந்தப் புடவையை பிரித்துப் பார்க்கத் தோன்றவில்லை. மறு நாளைய உணவைப் பட்டியலிடத் துவங்கினாள்.மறுநாள்… விதம் விதமான கார்களில் தங்கள் இணையோடு வந்திறங்கிய நண்பர்களை ரகுபதி ஆரவாரமாய் வரவேற்க, விடிந்தது முதல் அடுக்களையில் உழன்ற அலுப்பை முகத்தில் காட்டாமல் நீல நிறப் பட்டுடுத்தி தலைவாரி பூச்சூடி சிரித்த முகத்தோடு வரவேற்றாள் ராதா. அனைவரும் அமர்ந்து சாப்பிட தோதாய் இருக்கட்டும் என்று மொட்டைமாடியை சுத்தப்படுத்தி வைத்திருந்தாள். வண்ணமயமாய் காகிதங்களை கட்டி தொங்கவிட்டிருந்தார் ரகுபதி. அஜய் தன் அறையை விட்டு வெளியே வரவேயில்லை.

சரியாய் ஒரு மணிக்கு அனைவரும் சாப்பிட உட்கார்ந்து விட, சமைத்தவற்றை மேலே கொண்டு வருவதற்குள் திணறிப்போனாள். தாயின் சிரமம் கண்டு அவளை மேலே நிற்கச் சொல்லி விட்டு அனைத்தையும் மேலே எடுத்துச் சென்று அனைவருக்கும் பரிமாற உதவினான். பேச்சும் சிரிப்புமாய் விருந்து மூன்று மணி வரை நீண்டது.“சிஸ்டர்! சாப்பாடு அருமையாய் இருக்கு. இந்த டெக்னிக்கை என் வொய்ப்புக்கும் கத்துக்ெகாடுங்களேன்…”“எதுக்கு? என்னை கிச்சன்லயே போட்டு சாகடிக்கவா? வேணா நீ கத்துக்கோ! நான் டேஸ்ட்டியா சாப்பிடுறேன்” – என்ற கணவன்-மனைவியின் வாதத்தில் மொட்டைமாடியே கலகலத்தது.“ராதா! இவ்வளவு வெரைட்டியும் நீங்களே செய்தீங்களா?”
“ம்… ஆமா!”

“ரகு ஸார்! இது டூ மச்! இப்படியா உங்க மனைவியை வேலை வாங்குவீங்க? ஹோட்டல்ல ஆர்டர் பண்ணியிருக்கலாமே?”
“பண்ணியிருக்கலாம்! ஆனா, இவ்வளவு பாராட்டு என் மனைவிக்குக் கிடைத்திருக்காதே!“பெண்களுக்கு இந்த பாராட்டுக்களைவிட கணவனின் அனுசரனைதான் முக்கியம்.” – ஒரு பெண்மணி வெடுக்கெனக் கூற, வேகமாய் கைதட்டினான் அஜய். ரகுபதி மகனை முறைக்க, ராதா புன்னகைத்தாள்.

“இதெல்லாம் நானே ஆசைப்பட்டு செய்ததுதான். வராதவங்க வந்திருக்கீங்க! உங்களுக்கு என் கையால சமைச்சு போடுறதுலதான் எனக்குத் திருப்தி…”
“வாவ்! நீங்கதான் சிஸ்டர் மாதரசி. உங்களை மனைவியாய் அடைந்தது ரகுவோட அதிர்ஷ்டம்.” – என்று பேச்சுக்கள் நீண்டு கடைசியாய் திருமணநாள் எத்தனை சிறப்பானது என்ற வாதத்தில் வந்து நின்றது. “கல்யாண நாளா? அய்யோ! அது நாங்க அடிமையான கொடுமையான நாள்” – என்று ஆண்கள் சிரிப்பும் விளையாட்டுமாய் சொல்லிவிட, பெண்களின் முறை வந்தது.
“வானம்பாடியாய் பிறந்த என்னை கூண்டுக்கிளியாய் அடைத்த நாள்…” “ஏய் ஏய்… இதெல்லாம் ரொம்ப ஓவர். நானா உன்னை அடைத்து வைத்திருக்கேன். உன்
காலடியில கிடக்கிறேன் நான்” – என்றான் அவளது கணவன்.

“ராதா மேம்! நீங்க சொல்லுங்க! உங்க வாழ்க்கையில மறக்க முடியாத நாள் எது?”“இந்த நாள்தான்!”“ஓ! எங்க ரகு அவ்ளோ நல்ல கணவனா?”“ஆமா! எங்களுக்கு கல்யாணமாகி இருபத்தி அஞ்சு வருஷமாகுது. இதுவரைக்கும் என்னை வெளியே விடாமல், வெயில் படாமல் பொத்திபொத்தி பாதுகாக்கிறவரு. நான்.. அவர் அளவுக்கு படிக்கல. ஆனாலும் பெத்தவங்க வார்த்தைக்கு கட்டுப்பட்டு ரொம்ப பெருந்தன்மையோடு கல்யாணம் பண்ணினவரு. எல்லாருக்கும் இப்படி ஒரு வாழ்க்கை அமையாது” – நிதானமான குரலில் சொன்னவளை கோபமாய் நெருங்கினான் அஜய். அவன் வாயை திறப்பதற்குள் மற்றவர்கள் கரவொலி எழுப்ப, மகனிடம் பார்வையால் அமைதியாய் இருக்கச் சொன்னாள்.

“ஓ.கே. ராதா! போய் டீ போடு. மொளகா
பஜ்ஜியும், முந்திரி பக்கோடாவும் பண்ணிடு”
– என்ற கணவனிடம் தலையசைத்து விட்டு இறங்கிய
அன்னையை பின் தொடர்ந்தான் அஜய்.

“ஏம்மா இப்படி பண்ணீங்க? எவ்வளவு அருமையான வாய்ப்பு! பெரிய உத்தமர் மாதிரி வேஷம் போட்டுட்டு இருக்காரே.. அவரோட ஸ்டாப்புங்க முன்னால அவர் எப்படிப்பட்டவர்னு சொல்லி அவரோட முகமூடியை கிழிச்சிருக்கணும்மா!”“என்ன சொல்லியிருக்கணும்?”“எம்புருஷன் ஆணாதிக்கவாதி! என்னை அடிமை மாதிரி வீட்டுக்குள்ளயே அடைச்சிப்
போட்டிருக்காரு! சமையலறைதான் என் சிறைன்னு சொல்ல வேண்டியது தானேம்மா?”“இதைத் தானே நானும் சொன்னேன்?”
“ம்மா?”

“ஆமா அஜய்! நீ சொன்னதைத்தான் நானும் சொன்னேன். ஆனா, கோபமாய் சொல்லல. புன்னகைன்ற முகமூடியை போட்டுகிட்டு சொன்னேன்..”
“ஆனா, ஏம்மா…”“வேற வழி இல்லப்பா! எம்புருஷன் என்னை அடிமையாய் நடத்துறாரு.. மதிக்கிறதில்லன்னு சொல்றதால என்ன மாறிடப் போகுது? அவரோட வெறுப்பு கூடுமே தவிர குறையாது.”“உங்களை மாதிரி பொண்ணுங்க உங்க புருஷனை விட்டுக் கொடுக்காம இருக்கிறதாலதான் அப்பா மாதிரி ஆம்பிளைங்க திருந்துறதில்லை.”

“அஜய்! ஆரம்ப காலத்துல என்னை பெத்தவங்ககிட்ட உறவுங்க மத்தியில நான் சந்தோஷமாய் இருக்கிறதாய் காட்டுறதுக்காக போட்ட முகமூடி இது! அப்புறம் குழந்தைங்க… குடும்பம்.. சுற்றம்னு எல்லார்கிட்டயும் இதே முகமூடியோட வாழப்பழகிட்டோம். அதுக்கப்புறம் இதைக் கழட்டவே முடியல. நான் மட்டுமில்ல அஜய்.. என்னை மாதிரி எத்தனையோ பேர் இப்படித்தான் வாழுறாங்க. இங்கு வந்திருப்பதில் எத்தனை கணவன்- மனைவி மனமொத்து வாழ்கிறார்கள் என்று நினைக்கிறாய்? சபைக்காக ஒற்றுமையாய் நடிக்கிறாங்க. அது அவங்களோட பேச்சிலயே
எனக்குப் புரியுது.

உன் அப்பா மாதிரி என்னை மாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு முகமூடி! இதுதான் யதார்த்தம் அஜய்!” – என்றவாறே கிச்சனுக்குள் நுழைந்த தாயை மனம் கனக்கப் பார்த்தான் அஜய். மகனது முகவாட்டத்தைக் கண்டு இயல்பாய் புன்னகைத்தாள் ராதா. ஏனோ அஜயால் பதிலுக்கு புன்னகைக்க முடியவில்லை.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?