நன்றி குங்குமம் தோழி
தலை தலையாய் அடித்துக் கொண்டதாலோ என்னவோ தலை ‘விண் விண்” என்று வலித்து தலையை தூக்க விடாமல் செய்தது. கண்களை மறைத்த கலைந்த தலைமுடியை ஒதுக்க கூடத் தோணாமல் கட்டிலில் விழுந்து கிடந்தால் கமலி. சிவந்து போன அவள் கண்கள் பார்வையை திருப்பின. இடுப்பில் நிற்காமல் கழண்டு விழுந்த வேட்டியை எடுத்து கட்டக்கூட முடியாமல் போதையில் சரிந்திருந்தான் சுயம்பு.
கமலி விசிறி அடித்த வெங்காயக் கூடை ஒரு மூலையில் அமைதியாய் உட்கார்ந்திருந்தது. என்றோ விலை குறைவு என்று வாங்கி பத்திரப்படுத்தி வைத்த வெங்காயம் இன்று தோல் உறிக்க முடியாமல் ஒட்டிக் கொண்டு எாிச்சலூட்டியது. லாபம் பார்க்க நினைத்து கைகளை கிழித்துக் கொண்டதால் வந்த ஆத்திரம். யார் மேலோ இருந்த கோவத்தைக் காட்ட இன்று கையில் மாட்டியது வெங்காயம் தான். திரும்பிப் படுத்துக் கொண்டு விட்டத்தைப் பார்த்தாள். அவள் தாய் அடிக்கடி மகளை பார்த்து சொல்லும் வார்த்தை நினைவுக்கு வந்தது.
‘‘எல்லாம் நீ கடவுள் கிட்ட வாங்கி வந்த வரம் அப்படி. அனுபவி எல்லாம் உன் தலையெழுத்து. கிடைச்சத வெச்சு சந்தோஷப்படு? அதுகூட கிடைக்காதவங்க என்னப் பண்ணுவாங்கன்னு நினைச்சுப் பாரு? உன் நிலைமை புரியும்…’’ மகளுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தராத தாய் தத்துவங்களை மட்டும் அள்ளி வீசினாள்.
‘‘அம்மா எனக்கு கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலம்மா?’’
‘‘உனக்கு பிடிக்குதா, இல்லையாங்கறதப் பத்தி எனக்கு கவலை இல்ல. இந்தக் குடிகாரன கட்டிக்கிட்டு வாழ்க்கையோட போராடி உன்னக் கரை சேர்க்க நினைக்கிறேன்… நீ வழிவிட்டாதான் அடுத்து உன் தம்பி வாழ்க்கைய பார்க்க முடியும்.’’
‘‘நானும் தம்பி மாதிரி படிக்கிறம்மா? அவன மட்டும் படிக்க வைக்கிற இல்ல, நானும் படிச்சி வேலைக்குப் போய் சம்பாதிச்சு தரம்மா…’’‘‘இங்கப் பாருடி , அவன் படிச்சான்னா நாளைக்கு எங்களுக்கு சோறு போட்டு கவனிச்சிப்பான்… உனக்கு பத்து பவுனயும் போட்டு, படிக்க வைக்க என்னால ஆகாது? பேசாம நான் சொல்றவன கட்டிக்கிட்டு வாழற வழியப் பாரு…’’‘‘வேணாம்மா! அவனும் அப்பா மாதிரியே குடிச்சிட்டு சாக்கடைல விழுந்து கிடந்தா நான் என்னம்மா பண்ணுவேன்…’’ ‘‘குடிக்காதவன் இந்த உலக்கத்துலயே கிடையாது. குடிச்சாலும் சம்பாதிக்கிறானா, சொத்து வெச்சிருக்கானாங்கறது தான் முக்கியம் புரியுதா… பணம் மட்டுமே தான் நம் வாழ்கையை, நம் மரியாதையை தீர்மானிக்கிறது…” பார்வதியை சொல்லித் தவறில்லை. கணவனை கைப்பிடித்த நாளில் இருந்து கஷ்டத்தை மனதாலும், உடலாலும் அனுபவித்தவள்.
கையில் பத்து ரூபாய் இருந்தாலே சாராயக் கடையை நோக்கி ஓடும் கணவன். சம்பளப் பணத்தை கையில் வாங்கினாலே பணம் தீரும் வரை அவன் ஆட்டம் இருக்கும். பின்பு ஊரெல்லாம் கடன். பல சமயம் வாடகை கொடுக்க முடியாமல், சாப்பாட்டிற்கு காசில்லாமல் அவள் பட்டினியில் கிடந்த நாட்கள் அதிகம். எப்படியோ கஷ்டங்களோடு போராடி மகளுக்கு கொஞ்சம் பணம் நகையை சேர்த்திருந்தாள்.
‘‘கமலிய படிக்க அனுப்பலியா?’’
‘‘இல்ல… கமலிக்கு பதினெட்டு வயசு முடிஞ்ச உடனே கல்யாணம் செஞ்சு வெச்சுடலான்னு இருக்கறேன்… வயசுப் புள்ள எவனாவது மனச மாத்தி கூட்டிட்டு ஓடிட்டானா என்னப் பண்றது… அதனாலதான் வீட்டோட நிறுத்திட்டேன்.’’‘‘அது சரி! எம் புள்ளக் கூடத்தான் காலேஜ் போகுது. நாளைக்கு படிச்சி முடிச்சா அதுக்குத்தான லாபம். படிக்க வெக்கறத விட்டுட்டு தேவையில்லாம யோசிச்சு மக வாழ்க்கைய முடிச்சிடாத …’’ ‘‘அதெல்லாம் எனக்குத் தெரியும்…’’ பட்டென்று சொல்லிவிட்டு வந்தாள் பார்வதி.
‘‘அம்மா, ஃபேன்சி ஸ்டோர்ல வேலைக்கு ஆள் வேணும்னு கேட்கறாங்க… வீட்ல சும்மாதான இருக்கறேன் போய்ட்டு வரட்டுமா..?’’ அம்மாவின் அனுமதி வாங்கி வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஓடிவிட்டது. முதல் மாத சம்பளப் பணத்தை அம்மாவின் கையில் தந்தாள்.‘‘வீட்டுச் செலவுக்கு வெச்சுக்கோம்மா…’’‘‘இல்லம்மா… நாளைக்கு ஊருக்குப் போகனும்… உங்க அப்பாவோட தூரத்து சொந்தத்துல மாப்பிள்ளை இருக்கறதா தகவல் வந்திருக்கு… போய் பாத்துட்டு வரேன். நல்லபடியா முடிஞ்சா நம்ம குல தெய்வம் கோயில்ல பொங்கல் வைக்கிறதா வேண்டியிருக்கேன்… காலைல போய்ட்டு சாயந்திரம் வந்திடுவேன். சாப்பாடு எல்லாம் செஞ்சு வெச்சுட்டுத்தான் போறேன்.
சரியா கமலி…’’வேலைக்குப் போய் சம்பாதிக்கத் தொடங்கிய உடன் வீட்டில் கமலியின் மதிப்பு கொஞ்சம் உயர்ந்திருந்தது. தம்பி கூட அக்கா என்று கூப்பிடத் தொடங்கியிருந்தான். அப்பா குடித்து விட்டு வந்தாலும் மகளை உயர்த்திப் பேசுவார். அம்மா கமலிக்கு மாப்பிள்ளை பார்க்கப் போவதைக்கூட கமலியிடம் சொல்லிவிட்டுப் போவது கமலிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பார்வதி அடிக்கடி சொல்வதன் உண்மை கமலிக்கு புரிந்தது.‘‘பணம் மட்டுமே நம் வாழ்க்கையை, நம் மரியாதையை தீர்மானிக்கிறது…” அப்பாவை போல் இல்லாமல் எப்போதும் முகத்தில் பளிச்சென்று தெரியும் சிரிப்பு… கலையாத தலை முடி, அழுக்காகாத சட்டை, வேலைக்கு போகும் போதும் வரும் போதும் அவன் மீது வீசும் நறுமணம்.
‘‘பேச மாட்டியா? பார்க்க மட்டும்தான் செய்வியா..?’’ கூடவே வந்தான் ரகு.
‘‘வேலைக்கு நேரமாச்சு..?’’
‘‘நாளைக்கு சீக்கிரம் வா… உன் கிட்ட பேசணும்…’’
‘‘என்ன பேசணும்..?’’
‘‘நம்ப கல்யாணத்தப் பத்தி கொஞ்சம் பேசணும்…’’
‘‘ஐயோ எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க..?’’
‘‘யார் வீட்லயும் ஒத்துக்க மாட்டாங்க… உனக்கு என்ன பிடிச்சிருக்கா?’’
‘‘ம்..! நீ குடிப்பியா?’’‘‘குடிக்காம உழைக்க முடியாதும்மா? ஜாலிக்கு குடிக்கல? உடல் வலி தெரியாம தூங்கறதுக்கு மட்டும்தான் குடிப்பேன்… அதுவும் வாரத்துக்கு ஒரு முறை. அது சரி உன் முகம் ஏன் இப்படி அஷ்டகோணலா போகுது?’’ இரவெல்லாம் யோசித்தாள்… குடிகாரனை கட்டிக் கொண்டு வாழ விருப்பமில்லை கமலிக்கு. அப்பாவின் குடியால் வாழ்வில் பட்ட அவமானங்கள், கல்யாண வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டாம். அவனிடம் இருந்து முழுவதுமாக விலகினாள்.
‘‘நல்லா பெரிய வீடு, கிராமத்துல தோட்டம் துரவெல்லாம் இருக்காம். இப்ப வேலைக்காக இங்க இருக்காங்கலாம். மாப்பிள்ளைக்கு கம்பெனில நல்ல வேலையாம். மூணு அண்ணன், தம்பிங்க… இவர்தான் நடு ஆளு… ரொம்ப நல்லவரா இருக்காரு. புதன் கிழமை பொண்ணுப் பாக்க வராங்களாம்… அப்படியே நிச்சயம் பண்ணிடலாம். கமலி உன் சம்பளப் பணத்த சேர்த்து வெச்சிருக்கேன். அதுல மாப்பிள்ளைக்கு பிரேஸ்லெட்டும், செயினும் போட்டுடலாம்.
மாப்பிள்ளைக்கு கெட்டப் பழக்கம் எதுவும் இல்லையாம்…’’ அம்மாவின் விருப்பப்படியும், மறக்க முடியாத ரகுவின் நினைவோடும் நல்ல படியாக கல்யாணம் முடிந்தது. ஒரு மாதம் நன்றாகப் போன கல்யாண வாழ்க்கை திசை மாறியது. குடும்பத்தில் யாரோடும் யாரும் ஒத்துப் போகவில்லை… ‘‘படுக்க இடமில்லை. இருக்கற ஒரு ரூம நீ எடுத்துக்கிட்டினா நாங்க என்ன தெருவுலயா போய் படுக்கறது…’’ மூத்தவள் தொடங்கி வைத்தாள். வீட்டில் குழாய் ஒன்றும் இல்லை.எங்கோ போய் சுமந்து வந்தாள். இடுப்பு வலித்தது. கமலியின் பிடிவாதத்தால் தனி வீடு பார்த்துக் கொண்டு வந்தனர். ஒரே ஒரு ரூம். இரண்டாயிரம் வாடகை. பைப்பில் அடிக்கடி தண்ணீர் வராது. அங்கேயும் சுமந்துதான் ஆக வேண்டும்.
‘‘ஒரு வசதியும் இல்லாம இவ்வளவு வாடகைய குடுக்கறதுக்கு பேசாம கிராமத்துல இருக்கற உங்க வீட்டுக்கே போய்டலாமா?’’ ‘‘வீடா… அதெல்லாம் அப்பயே
வித்தாச்சு… இப்ப இருக்கற பெரிய வீடும் வாடகை வீடுதான். கல்யாணத்துக்கு வேண்டி எடுத்தது…’’ ‘‘கிராமத்துல வீடு இருக்கறதா பொய் சொல்லிதான் என்ன கல்யாணம் பண்ணியா?’’ ‘‘உங்க அப்பன் என்ன மல்டி மில்லினியரா? நீ இருந்தது சொந்த வீடா? இருக்கறத வெச்சு வாழப்பழகு…’’ கத்தி விட்டு சென்றான். தினமும் குடித்து விட்டுத்தான் வருவான். ஒரு குழந்தை பிறந்தும் அவன் மாறவில்லை. அப்பாவை திரும்ப பார்ப்பது போல் இருந்தது. எப்போதும் பணமில்லாத பற்றாக்குறை. ரகுவின் நினைவு அடிக்கடி வந்தது.
திரும்ப வேலைக்குப் போகத் தொடங்கினாள். ‘‘கமலி! நீ இங்கயா இருக்கற?’’ ரகுவின் குரலைக் கேட்ட உடன் மனதில் ஆயிரம் பூ பூத்தது.
‘‘இந்த தண்ணி லாரி என்னோடது தான் சொந்தமா வாங்கிட்டேன். இப்ப குடியெல்லாம் நிறுத்திட்டேன் தெரியுமா… உன்ன ரொம்பத் தேடுனேன்… அப்புறம்தான் தெரிஞ்சது…
எப்படி இருக்க கமலி?’’ ‘‘ம்! நல்லாருக்கேன்?’’ ‘‘உள்ள கூப்ட மாட்டியா?’’‘‘இல்ல நைட் ஷிஃப்ட் முடிஞ்சி வந்து தூங்கிட்டு இருக்காரு…’’
‘‘நைட் எல்லாம் டாஸ்மாக்ல டூட்டியா? அவர் வீட்டுக்குள்ள வரப்பவே நான் கவனிச்சிட்டேன்…’’‘‘வேலை அதிகம் அதனாலதான் கொஞ்சம் குடிப்பாரு ?’’ மனம் முழுவதும் வேதனையால் நிரம்பியது. காதலித்தவன் முன்பு அதுவும் தன்னால் வேண்டாம் என்று நிராகரிக்கப்பட்டவன் முன்பு இந்த அவமானம்… கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
அதையே தானடி நானும் சொன்னேன்… அப்ப மட்டும் ரோஷம் வந்துச்சு?’’ சட்டென்று பேச்சை நிறுத்தினான்.
‘‘நீ இவர தான் கல்யாணம் பண்ணிக்கிறதா எனக்கு தெரிஞ்சிருந்தா… எப்படியாவது கல்யாணத்த நிறுத்தியிருப்பேன்… நீ இங்க நிம்மதியா இல்லன்னு எனக்குத் தெரியும். இப்பயும் நான் உன்ன விரும்பறேன்… உனக்கு என்ன வேணும்னாலும் கேளு என்னால முடிஞ்சத பண்றேன்.’’ ‘‘வேண்டாம் ரகு… என் தலையெழுத்து இப்படி ஆய்டுச்சு… அவர் நல்ல ஆள்தான் குடிய நிறுத்துனா போதும்… என் வாழ்க்கைய நான் வாழ்ந்துட்டுப் போறேன்.
நீங்க ஒரு நல்ல வாழ்க்கைய தேடிக்கோங்க… நான் தனி ஆள் இல்ல… ரெண்டு குழந்தைக்கு தாய்’’ என்றாள் அமைதியாக. ‘‘அவங்களுக்காக நான் வாழ்ந்தாகணும்…’’ திரும்பி நடந்தாள் தலை ‘நொங்கென்று’ வீட்டுச் சுவரில் முட்டியது. ‘‘பாத்துப் போ… எப்பயும் நீ இப்படித் தான்…’’ உரிமையோடு மெல்ல கிசுகிசுத்தான்… அவள் கண்கள் நிறைந்து வழிந்தன. இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த சுயம்புவின் கண்களும் நிறைந்தன. தன் தவறை உணர்ந்திருந்தான்.
தொகுப்பு: சுதா ராணி