Friday, September 13, 2024
Home » சிறுகதை-முதல் காதல்!

சிறுகதை-முதல் காதல்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

ஓர் இனிய மாலைப் பொழுதில் அழகான மாமரத்தின் கீழ் பிரவீன் நின்றிருந்தான். கலைந்த கேசத்துடன், டிரிம் பண்ணிய தாடியுடன், ப்ளூ ஜீன்ஸ் பாக்கெட்டில் கைவிட்டவாறு சாந்தினியை இமைக்காமல் பார்த்தான். சாந்தினி சற்று தள்ளி நின்றிருந்தாள்.‘‘எனக்கு உன் மேல லவ் வரலடா, ப்ளீஸ் என் பின்னாடி வராத… எனக்கு உன்ன பிடிக்கல..!’’‘‘அப்படி சொல்லாத சாந்தினி! எனக்கு உன் பெயர் ரொம்ப பிடிக்கும். சாந்தினி என்றால் நிலா என்று அர்த்தம். நீ என் லைஃப்பில் வந்தால் அந்த நிலவொளி போல் என் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். நான் எவ்வளவோ என் மனசை கட்டுப்படுத்தி பார்த்தேன், என்னால முடியல… என் கண்கள் உன்னைதான் தேடுது… என் கால்கள் நீ இருக்கும் திசை நோக்கி நடக்கின்றன. என் உதடு உன் பெயரை மட்டும் உச்சரிக்கின்றன.

என் மனசு முழுக்க நீ மட்டும்தான் இருக்க..!’’சாந்தினி கண்களில் மிரட்சியுடன் பிரவீனை பார்த்தாள். அவளுக்குள் ஒரு இனம் புரியாத பயம். பிரவீனை தான் காதலிக்கிறோமா இல்லையா என்பது அவளுக்கே தெரியவில்லை. பிரவீன் தன்னை லவ் பண்ணுகிறான் என்பது புரிந்தது.

‘‘என் காதலை உனக்கு எப்படி புரிய வைக்கிறதுனு தெரில சாந்தினி … உனக்காக நான் எதுவும் செய்வேன்..!’’
‘‘அப்ப ஒண்ணு செய்! என்னை லவ் பண்றேனு சொல்லிக்கிட்டு என் பின்னால சுத்துறதை விட்டுடு… பை!’’ பொய்யான கோபத்தை காட்டிவிட்டு விறுவிறுனு அங்கிருந்து சென்றுவிட்டாள் சாந்தினி.

பிரவீன் ஏமாற்றத்துடன் அவள் செல்வதையே பார்த்தான்.‘சாந்தினி! நீ என் சாந்தினி!’ என்று பிரவீனின் உதடுகள் மென்மையாக முணுமுணுத்தன. தன் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக் கொண்டாள் சாந்தினி. பல கனவுகளோடு கம்பீரமான ஆதியின் கரம் பிடித்தாள். தன் அழகை கண்டு மயங்குவான், தன்னை வர்ணிப்பான், தலை மீது தூக்கி வைத்து கொண்டாடுவான் என்று பலவிதமான கற்பனைகளோடு இருந்தாள் சாந்தினி. அந்த கூட்டுக் குடும்பத்தில் சாந்தினியின் உணர்வுகள் ஒவ்வொன்றாய் சுக்கு நூறாய் நொறுங்கத் தொடங்கின. அன்று ஆதி அப்படி கேட்டதும் சாந்தினி சற்று தடுமாறிதான் போனாள்.

‘‘கல்யாணத்துக்கு முன்னாடி நீ யாரையாவது லவ் பண்ணியா சாந்தினி?’’
‘‘நோ ஆதி! உன்னை பார்த்ததும் உன் மேலதான் எனக்கு லவ் வந்தது!’’‘‘ஏன் அப்படி?’’‘‘எனக்கு ஹஸ்பெண்டாக வரப்போறவன் இப்படித்தான் இருக்கணும் என்று என் மனசில் கற்பனை பண்ணி வச்சிருந்தேன். அந்த உருவமாக நீ என் கண் முன்னாடி வந்த, உன்னை எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு’’ என்றாள் சாந்தினி குதூகலமாய்.

சாந்தினிக்கு ஆதியிடம் நிறைய பேசணும் போல் இருந்தது. அவள் அவனிடம் சொல்ல நினைப்பதை மாமியார் மாயாவதி அவளுக்கு முன்னாடி எல்லாவற்றையும் சொல்லி விடுவாள். தன் மாமியாரை அம்மாவை போல்தான் பார்த்தாள் சாந்தினி. மாயாவதிக்கு பிடித்த கீரை கூட்டு பண்ணினாள்.

‘‘இதை ஏன்ம்மா பண்ண… முருங்கைக்காய் சாம்பார் பண்ணியிருக்கலாமே’’என்றாள் மாயாவதி தான் என்ன பண்ணாலும் ஏன் இப்படி பண்ண, அப்படி பண்ணியிருக்கலாமே என்பது மாயாவதியின் விவாதமாக இருந்தது. அப்பேர்பட்ட மாமியாருடன் சிரிச்சு பேசி பழகுவது கடினமாக இருந்தது சாந்தினிக்கு. சாந்தினி ஆதியுடன் இருக்க விரும்பினாள். ஆனால் மாயாவதி அதை விரும்பவில்லை. அன்று தொடங்கியது பிரச்னை. மாமியார், மாமனார் ஆதிக்கத்தால் சாந்தினியின் உணர்ச்சிகள் வற்றிப் போயின. பிரச்னைகளுக்கு இடையே சாந்தினி-ஆதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

அதற்கு நட்சத்ரா என்று பெயர் வைத்தார்கள். சாந்தினி கிச்சனில் சமைக்கும் போது வழக்கமாக மாயாவதி ஆதியுடன் பேசிக் கொண்டிருப்பாள். இன்று வேறொரு இளம்பெண்ணின் குரல் கேட்டது. சாந்தினி எட்டிப் பார்த்தாள். ஆதியும் அந்த இளம்பெண்ணும் சிரிச்சு பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த பெண் சென்றதும் , யார் அவ ? எனக் கேட்டாள் சாந்தினி.
‘‘கமீலா!’’‘‘அது யாரு?’’‘‘பக்கத்து வீட்டுப் பொண்ணு!’’‘‘அவகிட்ட நீ அப்படி என்ன பேசிகிட்டு இருந்த?’’‘‘சின்ன வயசுல இருந்து அவளை தெரியும். அவ டிசிஎஸ்ல ஒர்க் பண்றா… நான் இன்போசிஸ், அவ பிராஜெக்ட் பத்தி சும்மா பேசிகிட்டு இருந்தோம்!’’
‘‘எனக்கு இது பிடிக்கல ஆதி!’’‘‘எது பிடிக்கல?’’

‘‘நீ இப்படி இன்னொரு பொண்ணு கூட பேசறது எனக்கு பிடிக்கல!’’‘‘இதுல போய் என்ன இருக்கு?’’‘‘நீ என் கூட மட்டும்தான் பேசணும் ஆதி … வேற யார் கூடவும் நீ பேசறத நான் ஒத்துக்கமாட்டேன்!’’‘‘ஓகே! இனி நான் அவ கூட பேசல’’என்றான் ஆதி.

மறுநாள் கமீலா ஆதியை பார்க்க வந்தாள். அவனுடன் ஜாலியாக அரட்டை அடித்து விட்டு சென்றாள். சாந்தினி உம்மென்று இருந்தாள்.‘‘ஓய் ! என்னாச்சு ? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நல்லா பேசிகிட்டு இருந்த… சட்டுனு அமைதி ஆயிட்டே’’ என்றான் ஆதி.
‘‘உனக்கு என் மேல லவ்வே இல்லை ஆதி!’’‘‘ஏன் அப்படி சொல்றே?’’

‘‘அந்தப் பொண்ணு கூட பேசாதனு சொன்னேன். ஆனா, நீ என் முன்னாடியே அவகூட சிரிச்சு பேசிகிட்டு இருக்க… எனக்கு கஷ்டமா இருக்குடா!’’‘‘இன்னொரு பொண்ணு கூட பேசறதுல தப்பில்ல சாந்தினி!’’ ‘‘இதே நான் வேற பாய்ஸ் கூட பேசினா ஒத்துப்பியா? என்னை கேள்வி கேட்பேல, சொல்லுடா?’’

ஆதி அவளையே பார்த்தான். ‘‘அதே மாதிரிதான் எனக்கும். நீ இன்னொரு பொண்ணு கூட பேசும்போது எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு. ப்ளீஸ்… இனி என்னை தவிர வேற யார் கூடவும் இப்படி சிரிச்சு பேசாதடா!’’ ‘‘கமீலாவை எங்களுக்கு சின்ன வயசுல இருந்து தெரியும். ஆதி கமீலா கூட பேசுறதுல எந்த தப்பும் இல்லை’’ என்று வக்காளத்து வாங்கிக் கொண்டு வந்தாள் மாயாவதி.‘‘இதுல தப்பு கண்டுபிடிக்க என்னம்மா இருக்கு? சாதாரண விஷயம்… நீ அதை போட்டு குழப்பிக்கிட்டு இருக்க’’ என்று ஜால்ரா தட்டினார் மாமனார்.

மாமியார், மாமனார் மீது சாந்தினிக்கு கோபம் வந்தது. பெத்த புள்ளையை கண்டிக்காமல் இப்படி ஏத்திவிட்டால் இவனுக்கு எப்படி நல்ல புத்தி வரும். கேடு கெட்ட புத்திதான் வளரும். அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு கணமும் அவளுக்கு திக்திக்கென்று இருந்தது. கமீலா தினமும் வந்தாள். உரிமையாக ஆதியின் அருகே அமர்ந்து பேசினாள். ஆதி அந்த அளவிற்கு அவளுக்கு இடம் கொடுத்திருந்தான். கமீலாவிற்கு ஆதியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. ஆதிக்கு அவளை பிடித்து போய் அவளை நன்கு கவர்ந்து விட்டான். ஆதி, கமீலா உறவு காதலாக மாறியது. இருவரும் சாந்தினி முன் சிரிச்சு பேசினார்கள். அவளைப் பற்றி கவலைப்படவில்லை.

மாமியாரும், மாமனாரும் சாந்தினியை ஒதுக்கிவிட்டு கமீலாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். சாந்தினி தினமும் அழுதாள். இந்த மாதிரி தருணத்தில் சாந்தினியின் முதல் காதல் அவள் மனதில் எட்டிப் பார்த்தது. அது பள்ளிப் பருவ காதல்! அவள் மனதில் பிரவீன் தோன்றினான். சாந்தினி பிரவீனை பற்றி நினைத்தாள். ‘பிரவீன் நான் உன்னை கல்யாணம் பண்ணி இருந்தால் என் மணவாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்…’ அவள் உதடுகள் முணுமுணுத்தன. கண்ணீர் கடகடவென கொட்டியது.

அன்று மாலை சாந்தினியின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக போனது. ஆதி சாந்தினியின் அருகே வந்து அமர்ந்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் அருகில் ஆதி உட்காருகிறான் என்று அவள் சந்தோஷப்பட்டாள்.‘‘நான் கமீலாவை கல்யாணம் பண்ணிக்க போறேன்… எனக்கு டைவர்ஸ் வேணும்’’ என்றான் ஆதி.

சாந்தினி தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. பேரதிர்ச்சியுடன் அவனையே பார்த்தாள் சாந்தினி. கட்டிலில் இரண்டு வயது குழந்தை நட்சத்ரா பேவென்று அழுது கொண்டிருந்தது. ‘‘உனக்கும் குழந்தைக்கும் வேணுங்கிற ஜீவனாம்சத்தை நான் மாசமாசம் அனுப்பிடுறேன். நாளைக்கு லாயர் கிட்ட போகணும் ரெடியா இரு!’’

‘‘நோ! நோ! நான் டைவர்ஸ் தரமாட்டேன் ஆதி! நான் உன் கூட வாழணும்… எனக்கும் குழந்தைக்கும் உன்னை விட்டா யாரும் இல்லை… ப்ளீஸ் எங்களை கைவிட்டுடாதே..!’’
‘‘ஏய்! எனக்கு உன் கூட வாழ பிடிக்கலை… நான்தான் மாச மாசம் ஜீவனாம்சம் தரேன்னு சொல்றேன்ல!’’
‘‘நான் டைவர்ஸ் தரமாட்டேன்’’ என்று வெறி பிடித்தவள் போல் கத்தினாள் சாந்தினி.

‘‘உன்னை எப்படி இந்த வீட்டை விட்டு துரத்துறதுனு எனக்கு தெரியும். என்னோட அடுத்த மூவ் என்னனு நீ பார்க்கதானே போற…’’ கோபமாக கத்தினான் ஆதி.
‘‘நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன்… கடைசி வரைக்கும் நான் உன்கூட தான் இருப்பேன்… நீ என்ன பண்ணாலும் நான் இங்கிருந்து போகமாட்டேன்!’’ என்று அழுதவாறு சொன்னாள் சாந்தினி. ஆதி முறைத்துவிட்டு போனான். அன்றிரவு தூங்காமல் அழுது கொண்டிருந்தாள் சாந்தினி. ஆதி அருகில் இல்லை. மெல்ல எழுந்து சென்று கதவை சப்தமில்லாமல் திறந்து பார்த்தாள்.

ஆதி மாயாவதியிடம் கத்திக் கொண்டிருந்தான்.‘‘அவ டைவர்ஸ் தரலைன்னா பேசாம அவளை கொன்னுட்டு நானும் கமீலாவும் கல்யாணம் பண்ணிக்க போறோம்…’’
என்றான் வெறித்தனமாக. சாந்தினியின் நெஞ்சம் அதிர்ந்தது.‘‘கொஞ்ச நாள் பாருப்பா… அவ உன் வழிக்கு வரலைன்னா பேசாம அவளை காலி பண்றத தவிர வேற வழியில்லை’’ என்றார்கள் மாமியாரும், மாமனாரும்.

நல்ல மாமியார் நல்ல மாமனார்… என்னை ஏன் யாருக்கும் பிடிக்காமல் போனது… வயதில் பெரியவர்கள் நெஞ்சில் அன்பும் இல்லை பாசமும் இல்லை அடாவடித்தனம்தான் அதிகமாக இருக்கின்றது… இந்த மாதிரி மிருகங்கள் கூட இருப்பதற்கு பதிலாக தனியாக வாழ்வதே மேல் என்று முடிவெடுத்தாள் சாந்தினி. ஆதி பெட்ரூமிற்கு வந்ததும் அவனை பார்த்து கண்ணீர் வழிய கையெடுத்து கும்பிட்டாள்.‘‘நான் டைவர்ஸ் குடுத்திடுறேன் ஆதி, ப்ளீஸ் என்னை கொன்னுடாதே ! அம்மா இல்லாத பொண்ணாக என் பொண்ணு கஷ்டப்படக்கூடாது… என் பொண்ணுக்காக நான் உயிரோட இருக்கணும்… உன் விருப்பப்படி உன் தாய், தகப்பன் கீழ்த்தரமான ஆசைப்படி நீ எவளையும் கல்யாணம் பண்ணிக்கோ… எவ கூட வேணா கூத்தடி நான் குறுக்கிட மாட்டேன்… பை!’’

தான் ஜெயித்துவிட்டோம் என்கிற அகங்காரம் ஆதியின் கண்ணில் தெறித்தது. விவாகரத்து பெற்றபின் சாந்தினியின் மனது கடுமையாக வலித்தது… அந்த கணமே இறந்து விடலாம் போல் இருந்தது. எதுவும் அறியாத நட்சத்ரா வாயில் விரலை வைத்து உழப்பிக் கொண்டிருந்தது. ஆதி சந்தோஷமாக கமீலாவை கல்யாணம் பண்ணிக் கொண்டான். ‘‘என்ன ஜென்மங்கடா நீங்க … இன்னொரு பொண்ணை பார்த்ததும் கட்டண பொண்டாட்டியையும் பச்சக் குழந்தையையும் தூக்கி எறிஞ்சிட்டு அந்தப் பொண்ணு பின்னாடியே போயிடுறீங்க…

மனசாட்சி உறுத்தி சாவமாட்டீங்களாடா…’’இத்தனை வருடங்களுக்குப் பின் சாந்தினியை மீண்டும் அதே மாமரத்தின் கீழ் சந்திப்போம் என்று பிரவீன் எதிர்பார்க்கவில்லை. பிரவீன் இப்போ அமேசானில் ஒரு நல்ல நிர்வாகியாக பணிபுரிகிறான். அன்று பார்த்ததை விட இப்போ இன்னும் கொஞ்சம் ஸ்மார்ட்டாக இருந்தான்.

சாந்தினியின் தோற்றத்தை கண்டு அதிர்ந்து போனான். தேகம் மெலிந்து, கன்னம் ஒட்டிப்போய்… கண்கள் சுருங்கி, மிகுந்த சோகத்துடன் காணப்பட்டாள்.‘‘பிரவீன், என்னை ஞாபகம் இருக்கா?’’பிரவீன் மெல்லிய புன்னகையுடன் தலையாட்டினான்.‘‘அன்னிக்கு நீ உன் லவ்வை சொன்னப்ப நான் குழம்பி போனேன். ஆனா, என் கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை நிறைய நினைச்சேன் டா… என்னோட போராட்டமான மணவாழ்க்கையில் என் முதல் காதல் வந்து வந்து உன்னை நினைவு படுத்திக்கிட்டே இருந்துச்சு… எனக்கு கூட சில சமயம் தோணும் உன்னையே நான் கல்யாணம் பண்ணி இருந்தா நீ என்னை இப்படி நடுத்தெருவுல நிக்க வெச்சியிருக்கமாட்டேல…’’ சாந்தினி விக்கி விக்கி அழுதாள்.

‘‘ஏய், அழாதே சாந்தினி, நான் உனக்கு இருக்கேன்!’’‘‘நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்டா, உன் கிட்ட சொல்லி அழணும்னு தோணிச்சு, அதான் உன்னை தேடி வந்தேன். உன்னை கண்டுபிடிக்காம போயிருந்தா எனக்கு பைத்தியமே பிடிச்சிருக்கும்!’’
சாந்தினி கிளம்ப முற்பட்ட போது, ‘‘நில்லு சாந்தினி! என்னை விட்டுட்டு எங்கே போற? என்னையும் உன் கூட கூட்டிட்டு போ!’’‘‘என்ன சொல்ற?’’

‘‘இனி மேலும் என்னால தனியா இருக்க முடியாது சாந்தினி, நானும் உன் கூட வர்றேன்!’’
‘‘உனக்கு எப்பவுமே விளையாட்டுதான் பிரவீன், போய் உன் குடும்பத்தை பாரு…!’’
‘‘குடும்பமா? அப்படின்னா?’’

‘‘உன்னோட ஒயிப், உன் பசங்க… உன் ஒய்ப் ரொம்ப லக்கி பிரவீன்… தினமும் அவளை காதல் மழையில் நனைய வெப்பேல…!’’‘‘நீ நினைக்கிற மாதிரி எதுவும் கிடையாது! நான் கல்யாணமே பண்ணிக்கல!’’
சாந்தினி குபீரென்று சிரித்தாள்.

‘‘சிரிக்காத சாந்தினி, நிஜமாதான் சொல்றேன், நான் கல்யாணமே பண்ணிக்கல!’’
‘‘ஏன் டா?’’‘‘உன்ன லவ் பண்ணேன்… அதுக்கப்புறம் எனக்கு வேற எந்த பொண்ணு மேலேயும் லவ் வரல… கல்யாணம் பண்ணிக்காம உன்னை மட்டும் மனசுல லவ் பண்ணிக்கிட்டு இருந்துட்டேன்… அது கூட சுகமா தான் இருந்தது சாந்தினி!’’சாந்தினி அவனையே பிரமிப்பாய் பார்த்தாள்.

‘‘நான் உன்னை ஒண்ணு கேட்கட்டுமா சாந்தினி?’’
‘‘என்ன டா?’’
‘‘நீ ஏன் நடுத்தெருவுல நிக்கணும்… நாம இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?’’

‘‘உன்னையும் உன் குழந்தையையும் நான் நல்லா பார்த்துகிறேன்’’ என்றான் பிரவீன் அன்பாய். அவளின் எதிர்காலமும் அவளது பெண்ணின் எதிர்காலமும் கேள்விக்குறியாய் இருந்தது. இருண்டு போய் கிடந்த அவளது உலகில் அவன் சொன்ன வார்த்தைகள் பிரகாசமான வெளிச்சத்தை கொட்டியது போல் இருந்தது. நெஞ்சுக்குள் அழுத்திக் கொண்டிருந்த துக்கம் அழுகையாக வெடிக்க… பரவசத்தில் பிரவீனை இறுக கட்டிக் கொண்டு அழுதாள் சாந்தினி.‘சாந்தினி, நீ என் சாந்தினி!’ என்று பிரவீனின் உதடுகள் முணுமுணுத்தன.

தொகுப்பு: அனிதா குமார்

You may also like

Leave a Comment

4 + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi