நன்றி குங்குமம் தோழி
என்னால் இதற்கு நஷ்ட ஈடு கொடுக்க முடியும் என்று தோன்றவில்லை. சட்டென சில நொடிகளுக்குள் நடந்து முடிந்து விட்டது. அது ஒன்றும் அவ்வளவு அகலமான ரோடு இல்லை. இன்னும் கொஞ்சம் மெதுவாக போய் இருக்கலாம். வேகம் எடுத்தது தவறுதான். ஆனால் ஏறக்குறைய அவனும் அதே வேகத்தோடுதான் வந்தான்.
நானாவது மெயின் ரோட்டில் காரில் வந்து கொண்டிருந்தேன். அவன் பைக்கில் சட்டென்று அந்த கிளை ரோட்டில் இருந்து எந்த அறிவிப்பும் இன்றி உள்ளே நுழைந்துவிட்டான். உடனே முடிந்தவரை வேகத்தை குறைத்துவிட்டேன். ரூல்ஸ்படி பார்த்தால் அவன் மெயின்ரோட்டின் இருபுறமும் பார்த்து விட்டுத்தான் உள்ளே நுழைந்திருக்க வேண்டும். நிச்சயமாக அவன் செய்தது தவறு.
நல்ல வேளையாக ஹெல்மெட் அணிந்திருந்தான். அதனால் கீழே விழுந்தும் தலை தப்பித்தது. எப்படியும் கேஸ் அவன் பக்கம் நிற்காது. நிறைய பார்த்திருக்கிறேன். ஒன்றுமே ஆகி இருக்காது. ஆனாலும் ஒரு கூட்டமாக வந்து ரகளை செய்வார்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை சண்டையிட்டு கறாராக பேசி கறந்து விடுவார்கள். அதுவும் நான் வெளியூரென தெரிந்தால் இன்னும் சுலபம். நான் சென்னையில் வசிக்கிறேன். கோவையில் ஒரு திருமணம். முடித்துவிட்டு கிளம்பும் போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது.
ஆபரேஷன் தியேட்டரிலிருந்து கொஞ்சம் பரபரப்பாய் வெளியே வந்த நர்சிடம், “எப்படி இருக்காரு… உயிருக்கு ஒண்ணும் பிரச்னை இல்லையே” என்றேன் பதட்டத்துடன்.
“சார், ப்ளீஸ்… கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாம அப்படி ஓரமா நில்லுங்க. டாக்டர் உங்கள கூப்பிடுவாரு” என்றாள். நிமிடங்கள் அவஸ்தையாய் கழிந்தன. அதற்குள் இன்னும் சில டாக்டர்கள் அவசரமாய் உள்ளே போனார்கள். மெதுவாய் எனக்கு இதய துடிப்பு எகிற ஆரம்பித்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது.
ஆக்சிடென்ட் ஆனவுடன் மயங்கி விழுந்த அவனை காரினில் ஏற்றி கூடவே உதவிக்கென வந்த இருவரும் மெதுவாய் நகரத் தொடங்கினார்கள்.“உங்களுக்கு அடிபட்டவரு யாருன்னு தெரியுமா..? நீங்களும் இதே ஊர்தானா?” “இல்ல சார்… எங்களுக்கு தெரியாது. விபத்தை பார்த்ததும் உதவி பண்ணலாமேன்னு வந்தோம். நாங்க கிளம்பறோம். இனி நீங்க பார்த்துக்கோங்க…” கிளம்பி விட்டார்கள்.
நல்ல வேளை இவர்கள் அவனுக்கு தெரிந்தவர்கள் இல்லை. கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. நகம் கடிக்கத் தொடங்கினேன். கடவுளே! பெரிய பிரச்னை எதுவும் ஆகியிருக்கக்கூடாது… யாருக்காவது போன் செய்தால் பரவாயில்லை என்று தோன்றியது. எதற்கும் இருக்கட்டும் என்று திரும்பவும் வசந்துக்கு போன் அடித்தேன். வசந்த் கோவையின் அசிஸ்டென்ட் கமிஷனர். என்னுடன் சென்னையில் ஒன்றாக படித்தவன். போன வருடம்தான் ஸ்கூல் ரீயூனியனில் சந்தித்து பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டோம்.
“டேய் வசந்த் கிளம்பிட்டியாடா… இங்க நான் ஒரே டென்ஷனா இருக்கேன்… கொஞ்சம் சீக்கிரம் வந்து சேரு… ப்ளீஸ்” என்றேன். “அந்த ஆளு கண்ணு முழிச்சிட்டானா..? ஒண்ணும் பயப்படாத… லோக்கல் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசிட்டேன். அவரு எல்லாத்தையும் பாத்துப்பாரு…’’“இன்னும் இல்லடா நெறைய டாக்டர்ஸ் உள்ளே போயிருக்காங்க… கொஞ்சம் பயமா இருக்குடா…”“சரி, ஒண்ணும் பதட்டப்படாத… இன்னும் அரை மணி நேரத்துல நான் அங்க இருப்பேன்…” இருபது நிமிடத்தில் சோர்வாய் வெளியே வந்த டாக்டர், “பேஷன்ட் கூட வந்தது யாரு” என்றார்.
போய் நின்ற என்னை பார்த்தவுடன், “நீங்க அவருக்கு என்ன ஆகணும்” என்றார்.“இது ஆக்சிடென்ட் கேஸ் சார்… என் வண்டியில அவரு வந்து மோதிட்டாரு…”
“ஆக்சிடென்ட்டா… இது ஹார்ட் அட்டாக் கேஸ்தான’’ என்றார் டாக்டர்.
உடனே அருகில் இருந்த நர்ஸ்…
‘‘சார் அந்த ஆக்சிடென்ட் கேஸ் ஒரு மைனர் இஞ்சூரி… அப்பவே வார்டுக்கு அனுப்பிட்டோம்.’’“என்னது வார்டுக்கு போயாச்சா..? நினைவு திரும்பிடுச்சா…? என்றேன் அதிர்ச்சியுடன்.
“ஆமாம் சார்… பிரச்னை ஒண்ணும் இல்ல சார்… ரெண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்தா போதும். நீங்க ரூம் நம்பர் 303ல போய் அவரப்பாருங்க…”தலையில் கை வைத்துக் கொண்டேன். இத்தனை நேரத்துக்கு அவன் போன் எடுத்து ஊரை கூட்டி இருப்பானே… என் கார் நம்பரை நோட் செய்து இருப்பானே… கையை பிசைந்து கொண்டு இருக்கையில் சரியான நேரத்திற்கு வசந்த் உள்ளே நுழைந்தான்.
அவனை பார்த்ததும் எனக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. அழைத்துக் கொண்டு வார்டுக்கு கிளம்பினேன். என்ன பேச வேண்டும்… எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வசந்த் எனக்கு சொல்லிக் கொடுத்தான். முடிந்த வரை ஒருவரை ஒருவர் தெரியாத மாதிரி காட்டிக் கொள்வது என்று முடிவு செய்து கொண்டோம்.பணம் எதுவும் கொடுக்கக் கூடாது… கூட்டம் கூடி மிகவும் பிரச்னை செய்தால் போனால் போகிறதென்று ஆஸ்பத்திரி செலவுக்கு மட்டும் ஒத்துக்கொள்ளலாம் என்றும் அதற்கும் மேல் ஏதாவது பிரச்னை செய்தால் லோக்கல் இன்ஸ்பெக்டரை வைத்து லேசாக மிரட்டலாம் என்றும் முடிவு செய்திருந்தோம்.
ரூம் எண் சரிதானா என்று பார்த்து விட்டு உள்ளே நுழைந்தேன். என்னை பார்த்தவுடன், “சார், நீங்கதான் இங்க கொண்டு வந்து என்னை அட்மிட் பண்ணீங்களா..? ரொம்ப நன்றி சார்” என்று வணக்கம் வைத்தான்.மையமாக சிரித்தேன். பார்க்க சுத்தமான கிராமத்தான் போலிருந்தான். “என்ன தம்பி இப்படித்தான் அவசரமா வண்டி ஓட்டுவீங்களா..?”
என் பேச்சை அவன் காதில் வாங்கியது மாதிரி தெரியவில்லை.‘‘என்னோட போன் உங்ககிட்ட இருக்கா… கொஞ்சம் கொடுங்க சார். ஒரு போன் பண்ணணும்… கொஞ்சம் அவசரம்” என்றான்.
“இல்லையே… உங்க போன நான் பார்க்கலையே’’ என்று இழுத்தேன்.”“சரி பரவாயில்ல… உங்க போனையாவது கொடுங்க.”
“யாருக்கு போன் பண்ணணும்… ஏதாவது கேஸ் கொடுக்கப் போறீங்களா..?” என்றேன் சந்தேகமாய்.“ச்சே… ச்சே… அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார். எங்க மாமாவுக்கு போன் பண்ணி விபத்து நடந்த இடத்துக்கு போய் பார்க்க சொல்லணும். அங்க கடைக்காரர் கண்டிப்பா என்னோட வண்டிய எடுத்து வச்சிருப்பார். ஆனா, என்னோட செயினை காணோம். அது அங்க கிடக்குதான்னு பார்க்க சொல்லணும்.
அப்படியே நான் இருக்கிற ஆஸ்பத்திரி பேரச் சொன்னா வந்து என்னை கூட்டிக்கிட்டு போக வசதியா இருக்கும். எல்லோரும் என்னை தேடிக்கிட்டு இருப்பாங்க…” அப்போதுதான் கவனித்தேன். மிகவும் ரெஸ்ட்லஸாக இருந்தான்.சந்தேகமில்லை. கூட்டம் சேர்க்க முயற்சி செய்கிறான். நான் தயங்கிய நேரத்தில் உள்ளே வந்த அந்த ஏரியா இன்ஸ்பெக்டர், “என்னடா வாட்ச் காணோம், செயின் காணோம்னு கலர் கலரா கதை சொல்ற… எந்த ஏரியாடா நீ” என்றார்.
“சார் கொஞ்சம் மரியாதையா பேசுங்க” என்று தொடங்கியவனை… “என்னடா மரியாதை… கண்ணு மண்ணு தெரியாம ஓட்டிட்டு வந்து இவர இடிச்சிட்டு மரியாதை கேக்குதா… முட்டிக்கு முட்டி தட்டி உள்ள வச்சா சரியா போயிரும்… நீங்க இவன் மேல ஒரு கம்ப்ளைன்ட் கொடுங்க சார்” என்றார். வசந்தின் செல்வாக்கு எனக்கு புரிந்தது. ‘‘இருக்கட்டும் சார்… கம்ப்ளைன்ட் எல்லாம் எதுக்கு… பாக்க சின்னவரா இருக்காரு… எதுக்கு எப்.ஐ.ஆர் எல்லாம்…”“அப்ப காம்ப்ரமைஸா போறீங்களா..?’’
“இதுல காம்ப்ரமைஸ் பண்ண என்ன இருக்கு..? தப்பெல்லாம் தம்பி மேலதான்” என்றேன் லேசாக சிரித்தபடி.அதற்குள் ‘தப தப’ என ஒரு நான்கைந்து பேர் உள்ளே நுழைந்தார்கள். அவன் நெற்றியின் கட்டைப் பார்த்ததும், “தம்பி உங்களுக்கு ஒண்ணும் ஆகல இல்ல… உங்கள இடிச்சவன் யாரு, அவன சும்மா விடக்கூடாது” என்றார்கள். ‘‘இல்ல மாமா… நம்ம கிளம்பலாம்” என்றான்.தொண்டையை கனைத்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் “அப்படியெல்லாம் போக முடியாது தம்பி… நீங்கெல்லாம் யாரு… ” “இவருதாங்க வடிவேலு வாத்தியார் மகன்’’ என்றதும் இன்ஸ்பெக்டரின் தொனி மாறிவிட்டது.
“ஏன் தம்பி அவ்வளவு வேகமா வந்தீங்க” என்றார். மெதுவாய் கத்தல் காணாமல் போய் இருந்தது. வாத்தியார் கொஞ்சம் செல்வாக்கானவர் போல் இருக்கிறது.ஒரு வேளை இன்ஸ்பெக்டரும் அவர்களோடு சேர்ந்து என்னிடம் பணத்தை கேட்பாரோ என்ற சந்தேகம் வந்தது. உள்ளே வசந்தை கூப்பிடலாமா என்று யோசிக்கையில், “மாமா நம்ம உடனே கெளம்பணும்… போய் ஆக வேண்டிய காரியத்தை பாக்கணும்… என்னோட செயின் வேற எங்கேயே விழுந்துருக்குன்னு தேடணும்…” “என்ன தம்பி சொல்றீங்க… அத அடகு வெக்கதான யாருகிட்டயும் சொல்லாம கொள்ளாம இப்படி அவசரமா கெளம்பி வந்தீங்க…இந்த ஆளச் சொல்லணும்… இவனாலதான் இப்ப எல்லா பிரச்னையும் மொத்த கோபமும் என் பக்கம் திரும்பியது.’’
“இல்ல மாமா… அவரு மேல தப்பில்லை. நான்தான் அப்பாவ நெனச்சுகிட்டே… அவருக்குதான் என்னால தொந்தரவு… என்ன மன்னிச்சுருங்க சார்” என்று கையெடுத்து கும்பிட்டான்.
எனக்கு கொஞ்சம் அவமானமாக இருந்தது. நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள். நான்தான் தேவை இல்லாமல் எல்லோரையும் தப்பாக நினைத்துவிட்டேன். அவசரத்தில் வசந்தை வேறு போன் செய்து வரச்சொல்லி… ‘ச்சே…’ என என்னையே நான் நொந்து கொண்டேன்.
“அப்பாவுக்கு என்ன ஆச்சு தம்பி” என்றேன் மெதுவாக… “காலையில அப்பா தவறிட்டாரு சார்… காரியத்துக்கு அடகு வெக்கதான் அந்த செயின எடுத்துட்டு வந்தேன். ஆனா, என்னோட கெட்ட நேரம் அதுவும் தொலைஞ்சு போச்சு” என்றான். கண்களின் ஓரம் தேங்கிய கண்ணீர் தெரிந்தது.“சரி, நீங்க கிளம்புங்க சார்” என்று கண்காட்டிய இன்ஸ்பெக்டரை கண்டு கொள்ளாமல் பாக்கெட்டில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அவனிடம் திணித்து விட்டு எதுவுமே பேசாமல் வெளியே வந்தேன்.
தொகுப்பு: ச.ஆனந்தகுமார்