
கடைகள் மற்றும் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், சிறுநீர் கழிப்பிடம், முதலுதவி வசதிகள் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்ட மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார். அதில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களின் வேலை நேரம், வார ஓய்வு, விடுமுறைகள், உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு போன்ற வேலை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துகிறது. இந்த நிலையில் 2016ம் ஆண்டு ஒன்றிய அரசு, மாதிரி கடைகள் மற்றும் நிறுவனங்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துதல்) சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், மாதிரி கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட மசோதாவை ஏற்றுக்கொள்வதன் மூலமாகவோ அல்லது நடைமுறையில் உள்ள சட்டத்தின் வகைமுறைகளை திருத்துவதன் மூலமாகவோ, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை மாநில அரசு மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது. எனவே தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, குடிநீர், கழிப்பிடம், சிறுநீர் கழிப்பிடம், முதலுதவி வசதிகள் ஆகியவற்றுக்காக, மாதிரி கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட மசோதாவில் உள்ள ஷரத்துகளை ஏற்பதென்றும், அதற்கேற்ற வகையில் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை திருத்துவதென்றும் அரசு முடிவு செய்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று அறிமுக நிலையிலேயே வலியுறுத்துவதாக மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் கூறினர்.