அருமனை: கடையாலுமூட்டில் செல்போன் கடையில் விலை உயர்ந்த செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் சிக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் மாலிக். இவர் கடையாலுமூடு சந்திப்பில் செல்போன்கள் விற்பனை செய்யும் ஷோரூம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது கடையின் முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் இருந்த புதிய விலை உயர்ந்த 16 செல்போன்கள், 5ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டு இருந்தன. இதன் மொத்த மதிப்பு சுமார் R1.28 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து கடையாலுமூடு காவல் நிலையத்துக்கு மாலிக் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் ஆய்வு நடந்தது. கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் நள்ளிரவு 1 மணி அளவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று செல்போன்களை மொபைல் போன் டார்ச் லைட் அடித்து திருடும் காட்சிகள் இருந்தன. இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.