மூனிச்: ஜெர்மனியில் நடந்து வரும் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று, 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஆர்யா போர்ஸ் – அர்ஜுன் பபுடா இணை அபாரமாக செயல்பட்டு தங்கப் பதக்கம் வென்றது. ஜெர்மனியின் மூனிச் நகரில் உலக துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை சுருச்சி சிங் (19) தகுதி பெற்றார்.
அந்த சுற்றில் அபாரமாக செயல்பட்ட சுருச்சி, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். பிரான்ஸ் வீராங்கனை கேமிலி ஜெட்ஸெஜெவ்ஸ்கி வெள்ளிப் பதக்கம் பெற்றார். சுருச்சி சிங், இதற்கு முன், பியனஸ் அயர்ஸ், லிமா நகரங்களில் நடந்த உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்நிலையில், நேற்று 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி பிரிவு போட்டி நடந்தது. அதில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை ஆர்யா போர்ஸ், இந்திய வீரர் அர்ஜுன் பபுடா இணை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
இறுதிச் சுற்றில் சீனாவின் ஸிபெய் வாங், லிஹாவோ ஷெங் இணையை, இந்திய இணை, 17-7 என்ற புள்ளிக் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. மூனிச் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ஏற்கனவே, தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன், மற்றொரு இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.