ஸ்டாக்கோம்: ஸ்வீடனில், ஸ்டாக்ஹோமில் இருந்து சுமார் 200 கி.மீ தொலையில் உள்ள ஓரேப்ரோ என்னும் இடத்தில் ரிஸ்பெர்க்ஸ்கா ஸ்கூல் என்ற கல்வி நிறுவனம் உள்ளது. பள்ளிக் கல்வியை முறையாக முடிக்காத மாணவர்களை உயர்கல்விக்கு தயார்படுத்துகிறது இப்பள்ளி. இதில் புலம் பெயர்ந்தோர்களுக்கு ஸ்வீடிஷ் வகுப்புகளும் செயல்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்வி நிலையத்தில் நுழைந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் தாக்குதல் நடத்திய நபரும் இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.
எனினும் தாக்குதல் நடத்தியவர் யார், அவரின் நோக்கம் என்ன? எத்தனை பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறித்து தகவல் இல்லை. இந்த சம்பவம் குறித்து ஸ்வீடன் பிரதமர் உல்ப், ‘‘முற்றிலும் அப்பாவிகள் மீது கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது. இது ஸ்வீடன் வரலாற்றிலேயே மிக மோசமான தாக்குதல். பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அதற்கான பதில்களை என்னால் அளிக்க முடியாது’’ என்றார். ஸ்வீடனில் உள்ள பள்ளிகளில் துப்பாக்கிசூடு சம்பவங்கள் மிக அரிதானதாகும். ஆனால் தற்போது துப்பாக்கிசூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளது அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


