தருமபுரி : தருமபுரி அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால், ஷூவை கழற்றி உணவக உரிமையாளரை தாக்க முயன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் காவேரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தர்மபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு உள் மற்றும் வெளி நோயாளிகள் என தினந்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையின் உள்ளே புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றி வரும் எஸ்எஸ்ஐ காவேரி என்பவர், தினமும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஓட்டலில் உணவு சாப்பிடுவது வழக்கம். அவ்வாறு சாப்பிடும் உணவிற்கு கையில் உள்ள பணத்தை கொடுத்து விட்டு, மீதியை பின்பு தருகிறேன் என கூறிவிட்டு சென்று விடுவாராம். நேற்று முன்தினம் எஸ்எஸ்ஐ காவேரி சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்கவில்லை. மேலும், பணத்தை அடுத்த நாள் சாப்பிட வரும் போது தருவதாக கூறியுள்ளார். அதேபோல் நேற்று மாலை உணவு சாப்பிட வந்த எஸ்எஸ்ஐ காவேரி சாப்பிட்டுள்ளார்.
அப்போது கடை உரிமையாளர் வீரமணியின் மகன் முத்தமிழ் என்பவர், முதல் நாள் அந்த எஸ்எஸ்ஐ சாப்பிட்ட உணவிற்கும் சேர்த்து பணம் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த எஸ்எஸ்ஐ, முத்தமிழை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். சாப்பிட்ட உணவிற்கான பணத்தை தூக்கி வீசி எறிந்து மிரட்டல் விடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த எஸ்எஸ்ஐ, தன் காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி முத்தமிழை அடிக்க முயன்றார். அதை ஓட்டலில் பணியாற்றும் ஆண், பெண் ஊழியர்கள் தடுத்தனர். இதனால் ஓட்டல் உரிமையாளரின் மகன் அதிர்ச்சியடைந்தார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியது.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின்பேரில் தருமபுரி உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் கடை உரிமையாளர் மற்றும் எஸ்எஸ்ஐ காவேரியிடம் விசாரணை நடத்தினார். இதனிடையே சிசிடிவி வீடியோ அடிப்படையில் விசாரணை நடத்தியதில் SSI அதிகாரி அத்துமீறியது உறுதியான நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் காவேரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆணையிட்டார்.