கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி பாரதிய ஜனதாவா அல்லது மதசார்பற்ற ஜனதா தளமா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் குமாரசாமி காங்கிரஸ் ஆட்சி அமைத்த நாள் முதல் தினமும் ஒரு புகாரை வாசித்து வருகிறார். காங்கிரஸ் தேர்தலில் அறிவித்த ஐந்து உத்தரவாத திட்டங்களை எப்படி அமல்படுத்தும். அரசிடம் நிதியில்லை என்று குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை பொய்யாக்கும் வகையில் ஐந்தில் நான்கு உத்தரவாத திட்டங்களை காங்கிரஸ் அரசு அமல்படு்த்திவிட்டது. உடனே, இது மக்களவை தேர்தலில் வாக்குகளை பெற காங்கிரஸ் மேற்கொள்ளும் தந்திரம் என்று குற்றம்சாட்டினார்.
இதையடுத்து மஜத எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க காங்கிரஸ் ரகசியமாக பேரம் பேசுகிறது என்று சர்ச்சையை கிளப்பினார். பின்னர், அதிகாரிகள் இடமாற்றத்துக்கு முதல்வர் உள்பட அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள் என்றார். இதையடுத்து திடீரென பாஜவுடன் கூட்டணி என்று அறிவித்தார். அதன்பிறகு காங்கிரஸ் அமல்படுத்தியுள்ள ஐந்து உத்தரவாத திட்டங்களுக்கான நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். தெலங்கானா சட்டமன்ற தேர்தலுக்காக முதல்வர் சித்தராமையா பிரசாரத்துக்கு சென்றார்.
அங்கு தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று பேசினார். இதை விமர்சித்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, கர்நாடகாவில் 2 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்று கூறிய வாக்குறுதியை சித்தராமையா நிறைவேற்ற வேண்டும் என்று சாடியதுடன் சித்தராமையா டூப்ளிகேட் முதல்வர் என்று விமர்சித்தார். இதே போல் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரையும் டூப்ளிகேட் துணை முதல்வர் என்று கடுமையாக பேசினார்.
குமாரசாமியின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பொறுமையாக காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தின் போது தனது வீட்டுக்கு அலங்கார விளக்கு அமைக்க சாலையில் இருந்த மின்கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்தாக அரசு சார்பில் குமாரசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. துணை முதல்வர் டி.கே.சிவகுமார் என்னை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
அலங்கார விளக்கு அமைக்க வந்தவர் செய்த தவறுக்கு நான் பொறுப்பேற்று அபராதம் கட்ட தயாராக இருக்கிறேன் என்று குமாரசாமி கூறினாலும் வீட்டை சுற்றி மின்சார திருடன் என்று போஸ்டர்கள் ஒட்டபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த விஷயத்தில் கூட்டணி கட்சியான பாஜ எந்த கருத்தும் சொல்லவில்லை என்பது தான் அனைவருக்கும் ஆச்சர்யம். இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகா இருண்டு கிடக்கிறது என்று குமாரசாமி கூறியிருந்த நிலையில் மின்சாரத்தை நீங்கள் கொக்கி போட்டு திருடினால் எப்படி கர்நாடகா ஒளிரும் என்று அரசியல் விமர்சகர்கள் நகைச்சுவையாக கேள்வி எழுப்பி குமாரசாமிக்கு ஷாக் கொடுத்துள்ளனர்.