சிவகங்கை: மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் கால்நடை சந்தைகளில் ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. சிவராத்திரிக்கு மறுநாள் விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்தி கடனாக ஆடுகள், கோழிகளை வாங்கி பலியிடுவதும் வழக்கம். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. மணல் மேடு, பெத்தனேந்தல், கீழடி, அல்லிநகரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 5,000 ஆடுகள் சந்தையில் குவிக்கப்பட்டு இருந்தன. 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.13,000க்கும், 20 கிலோ எடை கொண்ட கிடா ரூ.23,000க்கும், சேவல் ஒரு ஜோடி ரூ.450க்கும் விற்பனையாகின.
மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர். ஆண்டிபட்டி அருகே சந்தைப்பேட்டை கால்நடை சந்தையிலும் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. மகா சிவராத்திரி தினத்தில் குலதெய்வ படையலுக்காகவும், தொடர்ந்து வரும் முகூர்த்த நாட்களிலும் நடைபெறும் விஷேசங்களுக்காகவும் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள், பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றதால் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றது.