புதுடெல்லி: கேரள கடல் பகுதியில் சிங்கப்பூர் கப்பலில் பற்றி எரிந்த தீ 6 நாட்களுக்கு பிறகு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கப்பல், மீட்பு இழுவை படகுடன் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் சரக்கு கப்பல், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அழிக்கலில் இருந்து 44 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் திடீரென தீப்பிடித்தது.
கப்பலில் இருந்து கன்டெய்னர் ஒன்று வெடித்ததில் இந்த தீ ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கப்பலில் இருந்த 22 பணியாளர்களில் 18 பேர் இந்திய கடலோர காவல் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து கப்பலில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் இந்திய கடலோர காவல்படை ஈடுபட்டனர். இதில் 6வது நாளான நேற்று கப்பலின் பெருமளவு தீ கட்டுப்படுத்தப்பட்டது.
8 கப்பல்கள் மூலம் தண்ணீரை பீயச்சி சிங்கப்பூர் கப்பலில் தீ அணைக்கப்பட்டதைத் தொடர்ந்து கடற்படை வீரர்கள் நேற்று ஹெலிகாப்டர்கள் மூலம் அந்த கப்பலில் இறங்கி, மீட்பு இழுவை படகுடன் சிங்கப்பூர் கப்பலை இணைக்கும் ஆபத்தான பணியையும் வெற்றிகரமாக முடித்தனர். இதைத் தொடர்ந்து விரைவில் சிங்கப்பூர் கப்பல் இழுவை படகு மூலம் இந்திய கடல் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.