மும்பை: மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜ தலைமையிலான மகாயுதி கூட்டணி 235க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பாஜ போட்டியிட்ட 148 தொகுதிகளில் 132ல் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பாஜவின் கூட்டணி கட்சிகளான ஷிண்டே சிவசேனா 57 இடங்களிலும் அஜித்பவார் கட்சி 41 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. தேர்தலில் மகாயுதி வெற்றி பெற்றாலும் முதல்வர் பதவி யாருக்கு என்பது இன்னும் தெரியப்படுத்தப்படவில்லை.
பாஜவின் கூட்டணி கட்சியான சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே இப்போது முதல்வராக இருக்கிறார். ஆனால் புதிய ஆட்சியிலும் அவரே முதல்வர் பதவியில் தொடருவார் என்று பாஜ உறுதிப்படுத்தவில்லை. பாஜ மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பட்நவிஸ் முதல்வராக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், முதல்வர் பதவிக்கு ஷிண்டேயும், அஜித்பவாரும் காய்நகர்த்துவதாக தெரிகிறது.
மகாயுதி கூட்டணியின் அமோக வெற்றியை தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. நேற்று மகாராஷ்டிரா மாநில பாஜ தலைவர் சந்திரசேகர் பவான்குலே மற்றும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஷிவ் பிரகாஷ் உள்ளிட்டோர் பட்நவிசை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினர். இதனிடையே ,கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை தலைவராக அஜித்பவாரும், சிவசேனா சட்டப்பேரவை கட்சித் தலைவராக முதல்வர் ஷிண்டேயும் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.
முதல்வர் யார் என்பதை முடிவு செய்யும் பொறுப்பு பாஜ மேலிடத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும், முதல்வர் யார் என்பதை முடிவு செய்து இன்று அறிவிப்பு வெளியாகும் எனவும் பாஜ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பீகார் பார்முலாவா?: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜ 82 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியானது. இருப்பினும், 45 இடங்கள் மட்டுமே பெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் முதல்வரானார். இதே பாணியில் ஷிண்டே மீண்டும் முதல்வராக நெருக்கடி தருவதாக பேசப்படுகிறது.