* இத்தனை வருடம் அன்பைக் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி என நெகிழ்ச்சி
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். 2010ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த போட்டியில் 2வது பந்திலேயே அவர் டக் அவுட்டானார். தொடர்ந்து 2011ல் போர்ட் ஆப் ஸ்பெயினில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான போட்டி மூலம் டி.20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மொகாலியில் 2013ம் ஆண்டு அறிமுகமான தவான், அந்த போட்டியில் 187 ரன் விளாசி ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் அறிமுக டெஸ்ட்டில் அதிக ரன் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 34 டெஸ்ட்டில் ஆடி 7 சதம், 5 அரைசதத்துடன் 2315 ரன், 167 ஒரு நாள் போட்டிகளில் 17 சதம், 39 அரைசதத்துடன் 6793 ரன், 68 டி.20 போட்டியில் 11 அரைசதத்துடன் 1759 ரன் அடித்துள்ளார்.
கேப்டனாக 12 ஒரு நாள் போட்டியில் இந்திய அணியை தவான் வழி நடத்தியதில் 7 வெற்றி, 2 தோல்வி, 2 போட்டி ரத்தாகி உள்ளது. 38 வயதான தவான் கடைசியாக 2022ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி சிட்டகாங்கில் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடினார். அதன்பின்னர் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தவான் திடீரென அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று காலை வெளியிட்டுள்ள வீடியோவில், “எனக்கு ஒரே ஒரு கனவு இருந்தது, அது இந்தியாவுக்காக விளையாட வேண்டும். நான் அதை அடைந்தேன். எனது பயணத்தில் பங்களித்த பலருக்கு நான் நன்றி கூறுகிறேன். முதலில் என் குடும்பம். எனது சிறு வயது பயிற்சியாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நான் கிரிக்கெட்டின் அடிப்படைகளை கற்றுக்கொண்டேன்.
நான் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடிய எனது அணிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு இன்னொரு குடும்பம் கிடைத்தது, எனக்கு பெயர், புகழ் மற்றும் ரசிகர்கள் அனைவரின் அன்பும் கிடைத்தது. நான் நாட்டிற்காக அதிகம் விளையாடியதால் நிம்மதியாக இருக்கிறேன். எனக்கு வாய்ப்பளித்த பிசிசிஐ மற்றும் டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை வருடங்களாக எனக்கு அன்பைக் கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லில் ஆடுவார்
ஐபிஎல்லில் தவான், சன் ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக ஆடி உள்ளார். கடைசி 2 சீசனில் அவர் பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளில் இருந்து விலகினாலும் அவர் அவர் ஐபிஎல்லில் ஆட உள்ளார்.ஷிகர் தவான் கடந்த 2012ம் ஆண்டு தன்னைவிட 10 வயது அதிகமான ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆயிஷாவுக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி 2 மகள்கள் இருந்த நிலையில் விவாகரத்துக்கு பின் தவானை திருமணம் செய்துகொண்டார். தவான் மூலம் ஆயிஷாவுக்கு மகன் பிறந்தான். இந்நிலையில் 2021ம் ஆண்டு, ஆயிஷாவை தவான் விவாகரத்து செய்துகொண்டார்.