*தினமும் மாலை 5 மணிக்கு ஆஜராகிறதாம்
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர், அருகே மலையடிவாரப் பகுதிக்கு தினமும் மாலை 5 மணிக்கு வரும் காட்டுயானையால் பரபரப்பு நிலவுகிறது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு வனப்பகுதியில் புலிகள், கரடிகள், யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த இரண்டு மாதமாக காலை, மாலை நேரங்களில் மலை உச்சியில் இருந்து யானைகள் கூட்டமாக செண்பகத்தோப்பு அடிவாரத்திற்கு படையெடுக்கின்றன.
விவசாய பயிர்களை, தென்னை, மா மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. எனவே ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் உத்தரவின்படி ரேஞ்சர் செல்வமணி தலைமையிலான குழுவினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த 15 நாட்களாக தினமும் சரியாக மாலை 5 மணிக்கு மலை உச்சியில் இருந்து காட்டுயானை ஒன்று செண்பகத்தோப்பு மலையடிவார நுழைவுவாயில் அருகே வந்து விடுகிறது.
இதனால் இந்த யானைக்கு மலைவாழ் மக்களும், விவசாயிகளும் ‘ஐந்து மணி யானை’ என்று பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். இந்த யானை செண்பகத்தோப்பு நுழைவுவாயில் பகுதியான முதல் பாலம், 2வது பாலம், பேச்சியம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் இரவு முழுவதும் சுற்றி திரிந்துவிட்டு மறுநாள் காலை மலைக்கு சென்றுவிடுகிறது.
இது யாருக்கும் எவ்வித இடைஞ்சலும் செய்வதில்லை என மலைவாழ் மக்கள், விவசாயிகள் கூறுகின்றனர். எனினும் இந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். யானை நடமாடும் பகுதியில் பொதுமக்கள் யாரையும் செல்ல விடாமல் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், ‘‘படையப்பா, அரிசிக்கொம்பன் போன்ற யானைகளை போல் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஐந்து மணி யானையும் பிரபலமாகி வருகிறது. இது தினமும் சரியாக மாலை 5 மணிக்கு வந்து விடுகிறது. அங்கும், இங்கும் நடந்து சென்று கொண்டே இருக்கிறது. யாருக்கும் எந்த இடைஞ்சலும் செய்வதில்லை. எனினும் மலைவாழ் மக்களின் குடியிருப்பு அருகே நடமாடுவதால் அச்சமாக உள்ளது. இந்த யானைக்கு தந்தங்கள் இல்லை. நல்ல உயரமாக உள்ளது’’ என்றனர்.