ஷில்லாங்: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கட்சியை சேர்ந்த பிரமுகரின் உடல் மேகாலயாவில் கண்டெடுக்கப்பட்டது. கழுத்து நெரித்து அவர் கொல்லப்பட்டுள்ளார் என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 1000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி ஓடி வந்தார்.ஷேக் ஹசீனாவை தொடர்ந்து அவரது கட்சியான அவாமி லீக் கட்சியின் தலைவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றனர்.
இந்த நிலையில் வங்கதேசத்தின் எல்லையில் உள்ள மேகாலயா,கிழக்கு ஜெயின்டியா மாவட்டத்தில் கடந்த 26ம் தேதி ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. அங்கு கிடந்த பாஸ்போர்ட் மூலம் அவர் பெயர் இஷாக் அலி கான் பன்னா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கதேச அவாமி லீக் கட்சியின் முன்னாள் பொது செயலாளராக இருந்துள்ள இஷாக் அலிகான் எப்படி இந்தியாவுக்குள் வந்தார். அவரை யார் கொலை செய்தனர் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடைய உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கழுத்து நெரிக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஆனால் வங்க தேச எல்லை போலீசாரால் அவர் சுட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்பது போன்ற தகவல்களும் பரவி வருகின்றன.