டாக்கா: வங்கதேசத்தை 15 ஆண்டுகளாக ஆட்சி செய்த பிரதமர் ஷேக் ஹசீனா (77) இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதற்கிடையே, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்ததாக ஹசீனாவுக்கு எதிரான வழக்கை டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் போது, அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவு தலைவர் ஷகீல் அகந்த் புல்புல் என்பவரிடம் ஹசீனா தொலைபேசியில் பேசியதாக கசிந்த உரையாடல் பதிவு முக்கிய ஆவணமாக தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஹசீனா என நம்பப்படும் பெண் குரல், ‘‘எனக்கு எதிராக 227 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்படி என்றால் 227 பேரை கொலை செய்ய நான் லைசென்ஸ் பெற்றுள்ளேன்’’ என கூறுகிறது.
இது நீதிமன்றத்தை அவமதிப்பது என்றும், சாட்சிகளை அச்சுறுத்துவது போல் இருப்பதாகவும் கூறிய தீர்ப்பாயத்தின் நீதிபதி கோலம் மோர்டுசா மொசும்தர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனையும், புல்புலுக்கு 2 மாத சிறை தண்டனையும் விதித்தது.