புதுடெல்லி: அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். இதற்கு செயின்ட் மார்ட்டின் தீவுதான் காரணம் என்றும் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். வங்கதேசத்தில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் போராட்டம் நடத்தின. இந்த போராட்டம் கலவரமாக மாறியதால், கடந்த 5ம் தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்துள்ள நிலையில், இன்னும் அமைதியற்ற சூழலே நிலவி வருகிறது. இதற்கிடையே ஷேக் ஹசீனா சார்பில் பிரபல நாளிதழில் வெளியான கட்டுரையில், ‘வங்கதேசத்துக்கு சொந்தமான செயின்ட் மார்ட்டின் தீவை தங்களிடம் ஒப்படைக்க அமெரிக்கா வலியுறுத்தியது. அந்த தீவை அமெரிக்காவுக்கு வழங்கியிருந்தால், ஆட்சியில் நீடித்திருப்பேன். ஆனால், வங்கதேசத்தின் நலனுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தேன். தற்போது அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்துள்ளேன். நான் பேசியதை திரித்து கூறி மாணவர் போராட்டத்தை சிலர் தூண்டி விட்டனர். போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பதை நான் விரும்பவில்லை. எனவே, மாணவர்களின் நலன் கருதி, பதவியை ராஜினாமா செய்தேன். வங்கதேச மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். சமூக விரோதிகளை நம்பி ஏமாறாதீர்கள். அவர்களை எதிர்த்து நில்லுங்கள். அவாமி லீக் கட்சியினர், பொதுமக்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன.
நாட்டின் விடுதலைக்காக என் தந்தையும் (முஜிபுர் ரகுமான்), குடும்பத்தினரும் இன்னுயிரை தியாகம் செய்தனர். வங்கதேசம் மற்றும் நாட்டு மக்களுக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்வேன். இறைவன் அருளால் மீண்டும் வங்கதேசத்துக்கு திரும்பி வருவேன்’ என்று கூறியுள்ளார். செயின்ட் மார்ட்டின் தீவு விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அமெரிக்கா மீது நேரடி குற்றச்சாட்டு வைத்துள்ளதால், இவ்விவகாரம் சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. அதனால் செயின்ட் மார்ட்டின் தீவு குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. எதற்காக அமெரிக்கா இந்த தீவின் மீது குறி வைத்துள்ளது? ஷேக் ஹசீனா நாட்டை விட்டே ஓடிவரும் சூழலுக்கு தள்ளப்பட்டது ஏன்? போன்ற தகவல்களும் வெளியாகி உள்ளன. கடல் நீரால் சூழ்ந்த வெறும் 3 கிலோமீட்டர் நிலப்பரப்பு கொண்டசெயின்ட் மார்ட்டின் தீவு, வங்கதேசத்தில் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசத்தின் செயின்ட் மார்ட்டின் தீவை பொறுத்தமட்டில், உலகின் எந்த கடல் வழியில் இருந்தும் எளிதாக அணுக முடியும். வங்காள விரிகுடா மற்றும் சுற்றியுள்ள முழு கடல் பகுதியையும் இந்தத் தீவில் இருந்து எளிதாகக் கண்காணிக்க முடியும். வங்காள விரிகுடா தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா இடையே பாலமாக செயல்படுகிறது.
வர்த்தக வழிகள் மூலம் உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதில் வங்கதேசம் மிகவும் வசதியானதாக உள்ளது. ஆசியக் கண்டத்தில் திடீர் போர் ஏற்படும் பட்சத்தில், எளிதாக செயின்ட் மார்ட்டின் தீவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இந்த தீவானது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் மிக அருகில் உள்ளது. இந்த தீவின் மூலம் இந்தியா, சீனா போன்ற இரண்டு பெரிய பொருளாதார சக்திகளை அமெரிக்கா கண்காணிக்க முடியும். இவ்வழியாக நடக்கும் வர்த்தகத்தையும் அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக சீனாவின் கொட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது. இந்தத் தீவில் விமானப் படை தளம் ஒன்றை அமைக்க அமெரிக்கா விரும்புகிறது. பல்லுயிர், சுற்றுச்சூழல், சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த தீவு முக்கியமானதாக உள்ளதால், அதன் மூலம் ஆதாயம் அடைய அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. செயின்ட் மார்ட்டின் தீவானது, காக்ஸ் பஜார் – டெக்னாஃப் தீபகற்பத்தின் முனையிலிருந்து தெற்கே 9 கிமீ தொலைவில் உள்ளது. வங்கதேசத்தின் கடைசி தெற்கு முனையாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இந்தத் தீவு டெக்னாஃப் தீபகற்பத்தின் ஒரு பகுதியாக இருந்தது. டெக்னாஃப் தீபகற்பத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியதால், அதன் தெற்குப் பகுதி வங்காளதேசத்தின் பிரதான நிலப்பரப்பில் இருந்து பிரிக்கப்பட்டு ஒரு தீவாக மாறியது.
இந்த தீவில் முதன் முதலில் 18ம் நூற்றாண்டில் அரபு வணிகர்கள் குடியேறினர். அதனால் அந்த தீவிற்கு ‘ஜசீரா’ என்று பெயரிட்டனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது, இந்த தீவுக்கு அப்போதைய சிட்டகாங்கின் துணை ஆணையரின் நினைவாக செயின்ட் மார்ட்டின் தீவு என்று பெயரிடப்பட்டது. உள்ளூர் மக்கள் இந்த தீவை பெங்காலி மொழியில் ‘நரிக்கெல் ஜிஞ்சிரா’ என்று அழைக்கிறார்கள். அதாவது ஆங்கிலத்தில் ‘தேங்காய் தீவு’ என்று கூறுகின்றனர். வங்கதேசத்தின் பவளத் தீவு (முங்கா தீவு) என்றும் பெயரிட்டுள்ளனர். எனவே சர்வதேச அளவில் சீனா, இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா கொடுத்த நெருக்கடியால், ஷேக் ஹசீனா பதவியை இழந்து நாட்டை விட்டே ஓடவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.