டாக்கா: ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேற காரணமென்ன என்பது பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவின் தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றிய வாஜித் அளித்த பேட்டியில், ‘கடந்த 15 வருடங்களில் ஷேக் ஹசீனா வங்கதேசத்தை புரட்டிப் போட்டிருக்கிறார். அவர் ஆட்சிக்கு வந்தபோது, வங்கதேசம் ஒரு தோல்வியுற்ற, ஏழை நாடாகக் கருதப்பட்டது.
ஆனால் இன்று, வங்கதேசம் ஆசியாவின் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக நிற்கிறது’ என்றார். ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜேத் ஜாய் அளித்த பேட்டியில், ‘பிரதமராக ஷேக் ஹசீனா எந்த தவறும் செய்யவில்லை. தனது ஏமாற்றத்தையே அவர் வெளிப்படுத்தினார். நாட்டிற்கு சிறந்த அரசை வழங்கினார். இனி அவர் அரசியலுக்கு வரமாட்டார். அவர் தனது பேரக்குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவார். ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை. அவரின் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரது குடும்பத்தினரான நாங்கள்தான் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வற்புறுத்தினோம். அதனால்தான் புறப்பட ஒப்புக்கொண்டார்’ என்றார்.
வங்கதேச விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், `வங்கதேசத்தில் நடந்துவரும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். அமெரிக்கா வங்கதேச மக்களுடன் நிற்கிறது’ என்றார்.