புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க இந்தியா எம்.பி.க்கள் குழுக்களை அனுப்பியது. இதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற குழுவுக்கு காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையிலான குழு சென்று வந்தது. சசி தரூரின் பெயரை காங்கிரஸ் கட்சி பரிந்துரைக்காத நிலையில் அவரை மோடி அரசு தேர்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த பயணத்தின்போதும், பின்னர் நாடு திரும்பிய பின்னரும் சசி தரூர் பிரதமர் மோடியின் புகழை பாடியபடி இருப்பது காங்கிரஸ் தலைமையை கடுப்பாக்கியது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கே நேற்று முன்தினம் எக்ஸ் வலைதளத்தில் கருத்து தெரிவி்க்கையில், ஆபரேஷன் சிந்தூரின்போது நாங்கள் ராணுவத்துக்கு ஆதரவு அளித்தோம். நமக்கு நாடுதான் முக்கியம். ஆனால் சிலருக்கு மோடிதான் முக்கியம். அதற்கு அடுத்ததுதான் நாடு என கருதுகின்றனர். என்ன செய்ய முடியும்\” என்று குறிப்பிட்டிருந்தார்.
கார்கேயின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், சசி தரூர் நேற்றுமுன்தினம் எக்ஸ் தளத்தில் ஒரு பறவையின் படத்தை வெளியிட்டார். அதில் எழுதப்பட்டிருந்த வாசகத்தில், ‘‘வானம் யாருக்கும் சொந்தமில்லை. சிறகுகள் உங்களுடையது. பறப்பதற்கு யாரிடமும் அனுமதி கேட்காதீர்கள்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தான், பாஜவுக்கு தாவுவதைதான் சசி தரூர் சூசகமாக தெரிவித்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு எழுந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த எம்.பி மாணிக்கம் தாக்கூர் எக்ஸ் பக்கத்தில், ‘‘வானில் பறக்க அனுமதி கேட்காதே. பறவைகள் உயர பறக்க அனுமதி தேவையில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு சுதந்திரப் பறவை வானத்தை கவனமாக பார்க்க வேண்டும். பருந்துகள், கழுகுகள் மற்றும் ‘கழுகுகள்’ எப்போது வேண்டுமானாலும் வேட்டையாடும். சுதந்திரம் இலவசம் அல்ல, குறிப்பாக வேட்டையாடுபவர்கள் தேசபக்தியை இறகுகளாக அணிந்திருக்கும் போது’’ என்று குறிப்பிட்டுள்ளார். வேட்டை பறவைகளின் படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து சசிதரூர், காங்கிரஸ் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.