Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஈடற்ற அன்பை பரிமாறி தாய்மையை போற்றுவோம்: இன்று அன்னையர் தினம்

உலகத்தை படைத்தவன் இறைவன். ஆனால் உலகை வடிவமைத்த மனிதர்களை கருவில் சுமந்து இந்த பூமிக்கு தந்தவள் தாய் என்னும் அன்னை. அந்த அன்னையே அன்பின் வடிவாய் நின்று இந்த உலகத்தை வழிநடத்தும் தெய்வம். இதன் காரணமாகவே அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று கவிபாடினாள் தமிழ்மூதாட்டி அவ்வை.

எத்தனையோ வெளியுலக சவால்களை ஆண்கள் எதிர்கொள்கின்றனர். ஆனால் கருவிலேயே பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து, இந்த உலகில் அவதரிக்கும் தேவதை தான் பெண்மை. அந்த பெண்மையின் சிறப்புக்கு மகுடம் சூட்டும் தாய்மையின் ஒப்பற்ற இலக்கணம் அன்னை. இத்தகைய பெருமைக்குரிய அன்னையரை போற்றும் வகையில் உலகம் முழுவதும் அன்னையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அன்னையர் தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும், மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்படுகிறது. இதன்படி உலகளாவிய அன்னையர் தின ெகாண்டாட்டங்கள் இன்று (10ம் தேதி) நடக்கிறது. தாய்மார்களின் அர்ப்பணிப்பு மற்றும் அவர்கள் குடும்பத்திற்காக செய்யும் அளப்பரிய தியாகங்களை நினைவுகூரும் வகையில் இந்தநாள் கொண்டாடப்படுகிறது. உளவியல் ரீதியாக அன்னையர்களை தாண்டி, நம்மை வளர்த்தெடுத்த பாட்டிகள், வளர்ப்பு தாய்மார்கள் மற்றும் வழிகாட்டியாக திகழும் தாய்மை பண்பு கொண்ட அனைவரையும் போற்றுவதற்கு இந்தநாள், ஒரு சிறப்பான வாய்ப்பாக கருதப்படுகிறது.

இந்தநாளில் அன்னையர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்வதும் மிகவும் அவசியம். அன்னையர் தினத்தின் வேர்கள் பண்டைய கிரேக்கம் மற்றும் ரோமானிய நாகரீகங்கள் வரை நீண்டுள்ளது. அந்த காலகட்டங்களில் தாய் கடவுள்களான ரியா மற்றும் சைபெல் ஆகியோரை கவுரவிப்பதற்காக பிரத்யேக விழாக்கள் நடத்தப்பட்டு வந்தது. ஆனாலும் நாம் இன்று கொண்டாடும் அன்னையர் தினம் என்பது அமெரிக்காவின் சமூக ஆர்வலர் அன்னாஜார்விஸ் முயற்சியால் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவானது.

தனது தாயின் நினைவாகவும், அவர் செய்த சமூகப்பணிகளை போற்றும் விதமாகவும் 1908ல் அன்னாஜார்விஸ், முதன்முதலாக அதிகாரப்பூர்வமான அன்னையர் தின நிகழ்வை ஒருங்கிணைத்தார். பின்னாளில் இது உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றது. மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் அன்னையர் தினம் என்பதும் நிலைபெற்றது.

அன்னையர் தினத்தை கொண்டாடும் விதம் நாடுகள்தோறும் மாறுபடுகிறது. ஆனாலும் ஈடுஇணையற்ற அன்பை பரிமாறிக்ெகாள்வதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது. ஜப்பானில் இந்தநாளில் சிகப்புநிற கார்னேஷன் மலர்களை தங்களது தாய்மார்களுக்கு பரிசாக வழங்கி அன்பு, மரியாதையை வெளிப்படுத்துவர்.

ஆஸ்திரேலியாவில் கிரிஸான்தமம் மலர்கள் வழங்கி அன்பை வெளிப்படுத்துகின்றனர். இத்தாலியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி, தாய்மார்களுக்கு அன்றைய தினம் வீட்டு வேலைகளில் இருந்து முழுமையான ஓய்வு அளித்து மகிழ்கின்றனர். மெக்சிகோவில் இசை மற்றும் சிறப்பு உணவுகளை பரிமாறி, பாரம்பரிய பாடல்களை பாடி அன்னையர் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இப்படி பல்வேறு வடிவங்களில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனாலும் அன்னையர் தினம் என்பது பரிசுகள் வழங்கியோ, கொண்டாட்டங்களை முன்வைத்தோ நாம் கடைபிடிக்கும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக இருக்கக்கூடாது. அது ஒரு தாயின் உழைப்பை அங்கீகரிப்பதாக இருக்க வேண்டும். அவளது தியாகத்தை போற்றுவதாக இருக்க வேண்டும்.

தூயஅன்பை, அளவில்லாமல் அள்ளிக் கொடுப்பதாக அமைய வேண்டும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தனது குழந்தைகளின் மேன்மையை இலக்காக கொண்டு நகரும் வாழ்க்கை பயணத்திற்கு அர்த்தம் சொல்வதாக இருக்க வேண்டும். இதை மனதில் வைத்து ஒவ்வொரு மனிதனும் அன்னையர் தின கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்பது பெண்ணிய மேம்பாட்டு அமைப்புகளின் எதிர்பார்ப்பு.