செய்யாறு: செய்யாறு அருகே இன்று அதிகாலை தனியார் கம்பெனி பஸ் கவிழ்ந்தது. இதில் 22 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா மட்டதாரி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(28). இவர் சென்னை ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியின் பஸ் டிரைவராக உள்ளார். இவர் இன்று அதிகாலை 3 மணியளவில் கலவை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே உள்ள ராந்தம், அசனமாபேட்டை, பெருங்கட்டூர், கொடையம்பாக்கம் ஆகிய கிராமங்களில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கம்பெனிக்கு சென்றார். பஸ்சில் 40 தொழிலாளர்கள் இருந்தனர்.
கலவை-காஞ்சிபுரம் சாலை கொடையம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், பஸ்சில் இருந்த தொழிலாளர்களை பத்திரமாக மீட்டனர். இதில் கலவை அடுத்த ஆயிரமங்கலத்தை சேர்ந்த லிங்கேஷ்(19), ெபருங்கட்டூரை சேர்ந்த மேகலா(20), கனிகிளுப்பையை சேர்ந்த கோகுல்(23), கொடையம்பாக்கம் பாலாஜி(18), ராந்தம் மாலதி(34) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் கொடையம்பாக்கத்தை ேசர்ந்த துரைராஜ்(27), சரவணன்(22), சந்தோஷ்(24), அருண்குமார், நிவேதா, கீர்த்தனா, பொன்னி, ஆஷா, சினேகா, மோனிஷா, சிவகாமி, மகிளா, மலர், திவ்யா உள்பட 17பேர் லேசான காயம் அடைந்தனர். 18 பேர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த மோரணம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 22பேரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.