சென்னை: மலையாள படவுலகம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து நடிகையும், தயாரிப்பாளருமான அமலா பால் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவரிடம், ஹேமா கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமலா பால் கூறியதாவது: ஹேமா கமிட்டி அறிக்கையில் இருந்து மிகவும் கவலையளிக்கும் மற்றும் அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் வெளியாகியுள்ளன. இதற்கு உரிய நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த அறிக்கையை மக்களிடம் சேர்க்க அயராது உழைத்த குழு ஒன்று இருக்கிறது. இந்த முயற்சியில் அவர்கள் தனியாக இல்லை. அவர்களுக்கு சட்டம் உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருந்தது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அனைத்தும் புறக்கணிக்கப்படாது என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்புகிறேன்.