சென்னை: என்னிடம் யாராவது பாலியல் புகார் கொடுத்தால், உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். காரணம், நான் சாதாரண தலைவன் கிடையாது என்று நடிகர் சரத்குமார் கூறினார். இது குறித்து நடிகர் சரத்குமார் கூறியதாவது: ஹேமா கமிட்டி அறிக்கையில் உள்ள 281 பக்கங்களில் 160 பக்கங்களை நான் படித்துவிட்டேன். இதுபற்றி ஏனோ தானோ என்று நான் பேச விரும்பவில்லை. விலாவாரியாக பேச வேண்டும். சினிமா துறை மிக மோசமாக உள்ளதாகவும், வன்புணர்வு கொடுமை அதிகமாக இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலர் மீது அவதூறு பரப்பும் நோக்கில் பெயர்களைக் குறிப்பிட்டு அறிக்கையில் சொல்லவில்லை. இதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. மலையாள சினிமாவில் உள்ள நடிகர்கள் தவறு செய்துள்ளார்களா, இல்லையா என்பதை நிரூபிப்பது அவர்களின் கடமை.
கேரளாவில் நடிகைகள் கேரவனில் கேமரா இருப்பதாக எனது மனைவி கூறியிருந்தார். இதை ஏன் அப்போதே சொல்லவில்லை என்று குற்றம் சுமத்துகின்றனர். அனைவராலும் அப்போதே எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது. இதற்காக தான் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரை நாம் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை இருக்கிறது என்று தெரிந்தால் தான் இதை திருத்த முடியும். நடிகை யாரும் என்னிடம் புகார் கொடுத்தது கிடையாது. என்னிடம் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். காரணம், மற்றவர்களை போல் நான் சாதாரண தலைவன் கிடையாது. அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதே குற்றச்சாட்டு உள்ளது. இவ்வாறு சரத்குமார் கூறினார்.