திருவனந்தபுரம்: கேரள நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். மலையாள திரைப்பட நடிகர் சங்கத்திலிருந்து தலைவர் மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக ஹேமா குழு அறிக்கை அளித்தது. கேரள திரையுலகில் நடிகைகள் பலர் பாலியல் புகார்களை எழுப்பி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகை மீது கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட பாலியல் ரீதியான தாக்குதல் இந்த பிரச்சினைக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது. இதில் கேரள சினிமாவின் முன்னணி நடிகர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கேரள சினிமாத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள், பாலின பாகுபாடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிஷனின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் பெரும் அதிர்ச்சியளிக்கும் விஷயங்கள் இடம்பெற்றிருந்தன.
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை, சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அது வெளியான பின் பல நடிகைகள், தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது கூறி வருகின்றனர். இதில், சில மூத்த நடிகர்கள், இயக்குனர்கள் கட்டுப்பாட்டில் மலையாள திரையுலகம் இருப்பதாகவும், அவர்கள் விருப்பப்படியே அனைத்தும் நடப்பதாக கூறப்பட்டுள்ளது.
தங்கள் விருப்பத்தை நிறைவேற்றாத நடிகையரின் பட வாய்ப்புகளை இவர்கள் தடுத்து நிறுத்துவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் கூட இந்த குற்றங்களில் ஈடுபட்டு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளதாக தெரிகிறது. எனவே இந்த அறிக்கை கேரளாவை கடந்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. மலையாள திரைத்துறையில் நடிகர்கள், இயக்குநர்கள் மீது இதுவரை 8 நடிகைகள் பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலியல் புகார்களை தொடர்ந்து நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்து வருகின்றனர். பாலியல் புகார் காரணமாக கேரள நடிகர் சங்க பொதுச்செயலாளர் சித்திக் ஏற்கனவே ராஜினாமா செய்தார். மலையாள நடிகர் சங்கத்தில் செயற்குழு முழுவதும் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது.