சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் எந்த மாநிலங்களில் நடைபெற்றாலும் அது கண்டிக்கத்தக்கது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நடிகை குஷ்பு நேற்று அளித்த பேட்டி: மேற்குவங்க மாநிலத்தில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு பெண்களுக்கு தாயாக இருப்பதால் இந்த சம்பவத்தை நினைத்தால் என்னால் தூங்க கூட முடியவில்லை. மருத்துவ மாணவி கொலை வழக்கில், அந்த கல்லூரியின் முதல்வர் சிந்தீப் கோஷை காப்பாற்ற மேற்குவங்க முதல்வர் முயற்சி எடுக்கிறார். மருத்துவ மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, அந்த மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுவதற்குள் மருத்துவமனையில் இருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. சி.சி.டி.வி கேமராக்கள் சூறையாடப்பட்டுள்ளன. மனசாட்சி இருந்தால் மம்தா பானர்ஜி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். காங்கிரஸ் எம்.பிக்கள் மவுனமாக உள்ளனர். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் எந்த மாநிலங்களில் நடைபெற்றாலும் அது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன் அளித்த பேட்டியில், “மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் படுகொலை மட்டுமல்லாது, ஜனநாயக படுகொலை நடந்துக் கொண்டிருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்த வேண்டும்” என்றார்.