திருவனந்தபுரம்: தன் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண் யார் என்று தெரியாது எனவும், இந்த புகாரின் பின்னணியில் சதி இருப்பதாகவும் மலையாள நடிகர் நிவின் பாலி டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார். எர்ணாகுளம் அருகே கோதமங்கலம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மலையாள சினிமா தயாரிப்பாளரான ஏ.கே.சுனில் மற்றும் மலையாள நடிகர் நிவின் பாலி ஆகியோர் தன்னை கொடூரமாக பலாத்காரம் செய்ததாக புகார் அளித்திருந்தார். இதுகுறித்து கடந்த ஜூன் மாதம் உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஹேமா கமிட்டி அறிக்கை வந்த பிறகு நான் தைரியமாக மீண்டும் புகார் கொடுத்துள்ளேன் எனவும் அந்த பெண் தெரிவித்திருந்தார். இந்த புகாரையடுத்து, நடிகர் நிவின் பாலி உள்ளிட்ட 5 பேர் மீது கூட்டு பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் கொடுத்த இளம்பெண்தோழியான ஸ்ரேயா மீதும் வழக்குபதியப்பட்டுள்ளது. கூட்டு பலாத்கார வழக்குபதிவு செய்யப்பட்ட ஒரு சில மணி நேரத்திலேயே நடிகர் நிவின் பாலி நேற்று இரவு கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது; “என் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள பெண்ணை யார் என்றே எனக்குத் தெரியாது. இது ஒரு பொய்யான புகார். இதன் பின்னணியில் யாராவது இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. ஒன்றரை மாதங்களுக்கு முன் எர்ணாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னிடம் பேசினார். என் மீது ஒரு இளம்பெண்ணின் புகார் வந்துள்ளதாகவும் அது குறித்து விசாரித்ததில் உண்மை இல்லை என்று தெரியவந்ததால் புகாரை முடித்து விட்டதாகவும் கூறினார்.
இப்போது அந்தப் பெண் தான் மீண்டும் புகார் கொடுத்துள்ளார். இதனால் தான் நான் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளேன். எனக்கு யாரும் ஆதரவு அளிக்காவிட்டாலும் தனியாக போராடுவேன்” என்றார். இந்நிலையில் இது குறித்து நடிகர் நிவின் பாலி டிஜிபிஇடம் புகார் அளித்துள்ளார்.
தன் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண் யார் என்று தெரியாது எனவும், இந்த புகாரின் பின்னணியில் சதி இருப்பதாக கூறி டிஜிபியிடம் புகார் மனு அளித்த நடிகர் நிவின் பாலி, இந்த பொய் குற்றச்சாட்டின் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.