பெரம்பூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உடற்பயிற்சி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். வியாசர்பாடி பகுதியை சேர்ந்த (47) வயது பெண்ணுக்கு, 15 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமி, எருக்கஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீட்டில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்ட சிறுமி, சிறிது நேரத்தில் மயங்கி சரிந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக சிறுமியை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று அவரிடம் மருத்துவர்கள் மற்றும் பெற்றோர் விசாரித்தபோது, சிறுமி படிக்கும் அதே பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரியும் ஆல்பின் பிரேம்குமார் (26), பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், உடற்பயிற்சி ஆசிரியர் ஆல்பின் பிரேம்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
அதில், கடந்த சில மாதங்களாக உடற்பயிற்சி ஆசிரியர் சிறுமியுடன் பழகி வந்ததும், சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனால், சிறுமி மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, கொடுங்கையூர் லெபினான்புரம் சென்ட் பால் தெருவை சேர்ந்த ஆல்பின் பிரேம்குமார் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.