திருமலை: அரசு பள்ளியில் மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். ஆனால் தப்பி ஓடிவிட்ட அவரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ளது தூர்பு போயமடுகு அரசு உயர்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஆசிரியராக வெங்கய்யா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது வகுப்பு மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவாராம். மேலும் இதை வெளியே யாரிடமும் தெரிவிக்க கூடாது என மிரட்டுவாராம். இதையறிந்த பெற்றோர் அந்த ஆசிரியரிடம் சென்று எச்சரித்துள்ளனர்.
ஆனால் அவர் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதேபோல் நேற்று முன்தினமும் ஒரு மாணவியிடம் ஆசிரியர் வெங்கய்யா பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதைகேட்டு ஆத்திரமடைந்த அவர்கள் மற்றும் அப்பகுதி மக்களுடன் பள்ளிக்கு நேற்று திரண்டு வந்தனர். அங்கிருந்த ஆசிரியர் வெங்கய்யாவை சரமாரியாக தாக்கினர். இதனால் ஆசிரியர் அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார். ஆனால் விடாமல் அவரை ஓட ஓட விரட்டி அடித்து உதைத்தனர். பின்னர் அவரை கயிற்றால் கட்டி போலீசாரிடம் ஒப்படைக்க முயன்றனர்.
ஆனால், அவர்களிடம் இருந்து தப்பிய வெங்கய்யா பள்ளியின் சுற்றுசுவரை ஏறிக்குதித்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிவிட்ட ஆசிரியர் வெங்கய்யாவை தேடி வருகின்றனர்.