திருச்சி: திருச்சி துவாக்குடி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்ஐடி) தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு 10க்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ளன. கடந்த 29ம்தேதி ஒரு மகளிர் விடுதியில் இணையதள வசதியை ஏற்படுத்த ஒப்பந்த ஊழியரான ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த கதிரேசன்(38) சென்றார். அப்போது அறையில் தனியாக இருந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார். இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் கதிரேசனை கைது செய்தனர். இந்நிலையில் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்தும், விடுதி வார்டன்களின் பொறுப்பின்மையை கண்டித்தும் மாணவ, மாணவிகள் விடிய விடிய போராட்டம் நடத்தினர். வார்டன் மன்னிப்பு கேட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் விடுதி வார்டனும், இஇஇ துறை இணை பேராசிரியையுமான மகேஸ்வரி நேற்று முன்தினம் தனது வார்டன் பொறுப்பை ராஜினாமா செய்து என்ஐடி டீன் அகிலாவிடம் கடிதம் அளித்தார்.