* உயிர் பிழைத்து குமரி திரும்பியவர் கதறல்
அருமனை: துபாயில் மசாஜ் சென்டரில் வேலைக்கு சேர்ந்த குமரியை சேர்ந்த 42 வயது பெண் கண்களில் மிளகாய் பொடி தூவி பாலியல் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு 42 வயதாகிறது. இவருக்கு கணவர் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த பெண், மகளுடன் சில ஆண்டுகள் தனியாக வசித்தார். பின்னர் மேல்பாலையை சேர்ந்த ஒருவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். குடும்பம் வறுமையில் வாடவே, வீட்டு வேலைக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்த பெண் குவைத் சென்றார். அங்கு ஒரு வீட்டில் குழந்தைகளை கவனிக்கும் வேலை பார்த்த நிலையில், அங்கு வந்து சென்ற கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது.
அவர், துபாயில் உள்ள மசாஜ் சென்டரில் வேலை இருப்பதாக கூறி அந்த பெண்ணை அழைத்து சென்றார். சம்பளம் அதிகமாக கிடைக்கும் என்ற ஆசையில் கடந்த 2 ஆண்டுக்கு முன் துபாய்க்கு சென்றார். அங்கு மசாஜ் சென்டரில் வேலைக்கு சேர்ந்த பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய தொடங்கினர். நிர்வாகத்திடம் அந்த பெண் தகராறு செய்யவே தனி அறையில் அடைத்து வைத்து, கண்களில் மிளகாய் பொடி தூவி அடித்து உதைத்து சித்ரவதை செய்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அந்த காட்சிகளை செல்போனில் வீடியோ பதிவும் செய்துள்ளனர். மனம் உடைந்து போன பெண் அங்கிருந்து சாதுர்யமாக தப்பி, தேவாலயம் ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கிருந்த கன்னியாஸ்திரிகளிடம் தனது நிலையை எடுத்து கூறி கதறினார்.
இதையடுத்து சர்ச் நிர்வாகத்தின் உதவியுடன், ஊருக்கு புறப்பட்டார். திருவனந்தபுரத்தில் வந்திறங்கியதும், மறு நிமிடமே திருவனந்தபுரம் எஸ்.பி. ஆபீசுக்கு சென்று தன்னை துபாயில் உள்ள மசாஜ் சென்டருக்கு வேலைக்கு அழைத்து சென்று இந்த கதிக்கு ஆளாக்கிய பெண் மீது புகார் அளித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, நேற்று காலை அருமனை வந்த பெண், உடனடியாக அருமனை காவல் நிலையத்துக்கு சென்று ,துபாயில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தார். அவர் கதையை கேட்ட போலீசார் ஆறுதல், கூறி உணவு வாங்கி கொடுத்து சமாதானப்படுத்தினர்.
அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு அவரை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலன் காக்க அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை உருவாக்கப்பட்டு, புலம் பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை மூலம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.