சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவராக இருந்த மருத்துவர் சுப்பையா சண்முகத்திற்கு எதிராக பெண் மருத்துவர் பாலியல் புகார் அளித்திருந்தார். அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இந்த உத்தரவுகளை எதிர்த்து சுப்பையா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் விசாரித்தார். அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், சுப்பையாவுக்கு எதிராக இது போன்ற புகார்கள் தொடர்ச்சியாக வருவதாகவும், இவரை போன்ற நபர்களுக்கு நீதிமன்றம் கருணைக் காட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுப்பையாவின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனிநீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, டாக்டர் சுப்பையா மேல்முறையீடு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்து நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, மனுவுக்கு நான்கு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டனர்.